ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: ஆதித்தமிழர் பேரவை அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: ஆதித்தமிழர் பேரவை அறிவிப்பு
Updated on
2 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக ஆதித்தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் டிசம்பர் 21-ல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் மருதுகணேசனை ஆதரித்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது என ஆதித்ததமிழர் பேரவை தலைமைக்குழு முடிவு செய்து அறிவிப்பு செய்கிறது.

இதற்கான ஆதரவுக் கடித்தத்தை தி.மு.க செயல்தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலினிடம் நேரில் கொடுத்து தங்களது ஆதரவை உறுதிபடுத்தும் என ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பநிலை செயலற்ற எடப்பாடி.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பினாமி அரசினால் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமலும், தமிழக நலனுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க முடியாமலும் திணறிக்கொண்டு இருக்கிறது,

தங்களது கட்சிக்குள் உள்ள உட்கட்சி குழப்ப நிலையை சமாளிக்கும் முயற்சியில் மட்டுமே தங்களது முழுக்கவனத்தை செலுத்தி வருவதால், தமிழக மக்களின் நலன் குறித்து எந்தவித கவலையும், அக்கறையும் காட்டாமல் மக்களின் நம்பகத்தன்மையை அ.தி.மு.க அரசு இழந்து நிற்கிறது.

இந்நிலையில் மீனவர் படுகொலை, கந்துவட்டி தற்கொலைகள், ஆள்கடத்தல், கூலிப்படை கொலைகள், விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளஅரசின் அடாவடித்தனம் போன்ற, நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழப் பெண்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு என தமிழக அரசின் சட்ட ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, தமிழகத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்று மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது,

தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமலும், பல்கலைக் கழக இணை மற்றும் துணைப் பேராசிரியர்கள் நியமங்களிலும், தமிழக அரசுத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்பு நியமனங்களிலும் நேரடியாக ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் தலையிட்டு பல லட்சம் ரூபாயை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அருந்ததியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து அவற்றை பிற சமூகத்தவருக்கு மடைமாற்றி விடுகின்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவினை ஒழித்திடும் முயற்சியில், தூய்மை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தூய்மைத் தொழிலாளர் நலவாரியத்தை அ.தி.மு.க அரியணை ஏறியது முதல் அதை கிடப்பில் போட்டு செயலிழக்கச் செய்து, நவீனக் கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்காதனால் மலக்குழி மரணங்கள் நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதனால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

இப்படி எந்த துறைகளும் முன்னேற்றம் காணாமல் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் செயலற்ற அ.தி.மு.க பினாமி ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர், அதனுடைய வெள்ளோட்டம்தான் இந்த இடைத்தேர்தல், ஆகவே ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள் கையில் கிடைத்திருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்காகவும், தமிழக முன்னேறத்திற்காவும் முழு நேரமாக உண்மை உணர்வோடு உழைத்து வரும் தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற அவர் அறிவித்திருக்கும் வேட்பாளர் சகோதரர் மருதுகணேஷுக்கு, நமது வாக்குகளை அளித்து தமிழக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிட வேண்டும் என்பதை கேட்டுகொள்வதோடு, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அவரது அமோக வெற்றியை உறுதி செய்திட ஆதித்தமிழர் பேரவை தனது பிரச்சரத்தை ஆர்.கே.நகர் தொகுதியில் செய்திடும் என்று இந்த அறிவிப்பின் மூலம் தெரியபடுத்திக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in