Published : 23 Nov 2017 08:59 am

Updated : 23 Nov 2017 10:44 am

 

Published : 23 Nov 2017 08:59 AM
Last Updated : 23 Nov 2017 10:44 AM

சினிமாத் துறையின் ‘தனி ஒருவன்’

 

இயக்குநர், நடிகர் சசிகுமாரின் உறவினரும், படத் தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமாரின் மரணத்துக்கு காரணமானவர் என்று புகார் கூறப்பட்டுள்ள அன்புச்செழியன், அடக்க முடியாத சக்தியாக வளர்ந்த கதை சுவாரசியமானது.

யார் இந்த அன்பு?

மதுரை மாநகரில் வட்டித் தொழிலில் கொடிகட்டி பறப்பவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் இருந்து குடிவந்தவர்கள். இதில் ஒருவர்தான் அன்புச்செழியன். இவரது சொந்த ஊர் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவரின் மகன் அன்புச்செழியன்.

தந்தை ஓய்வுபெற்றபோது கிடைத்த பணப்பலன்களை முதலீடாக எடுத்துக் கொண்டு, மதுரை கீரைத்துரை பகுதிக்கு வந்தார். ஆரம்பத்தில் காய்கறி விற்பவர்களுக்கு கடன் கொடுத்தவர், அடுத்ததாக ’35 எம்எம்’ எனப்படும் திருவிழாக்களில் திரையிடுவதற்கான படப்பெட்டிகளை வாடகைக்கு விடும் தொழிலுக்கு மாறினார். அந்த அலுவலகம் மதுரை மேலஆவணி மூல வீதியில் செயல்பட்டு வந்தது.

இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற நகரங்களில் ‘செகண்ட் ரிலீஸ்’ படங்களை வெளியிடும் தியேட்டர் அதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். தியேட்டரில் படம் ஓட ஓட, இவருக்கு வட்டிப் பணம் வரும். இதை தொடர்ந்து, அவரே கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா விநியோக நிறுவனத்தை தொடங்கினார்.

தயாரிப்பாளராக அவதாரம்

அடுத்த கட்டமாக சினிமாத் துறையினருக்கு கடனுதவி கொடுப்பவராக வளர்ந்தார் அன்பு. விஜயகாந்த் நடித்த ‘வானத்தைப்போல’ (2000-ம் ஆண்டு வெளியானது) படம்தான் அவர் முதன்முதலில் கடனுதவி செய்த படம் என்கிறார்கள். கடன் கொடுக்கும் வரையில் அன்பானவராக இருக்கும் அவர், அதை திரும்ப வசூலிக்கும்போது எடுக்கும் அவதாரமே வேறு என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

அடியாட்கள்

மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியில் அன்புச்செழியனின் பழைய பங்களா உள்ளது. அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் தெற்குமாசி வீதியில் அமைந்துள்ளது. இங்கு ஊழியர்கள் என்று பார்த்தால் பத்து பதினைந்து பேர்தான் பணிபுரிகிறார்கள். ஆனால், அடாவடியாக கடன் வசூலிக்கும் அடியாட்களாக ஏராளமானோர் அங்கு இருக்கிறார்கள். இவர்களில் பலர் கமுதி, மதுரை வாழைத்தோப்பு, கீரைத்துரை, காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் வெளியாகிறபோது தினக்கூலி அடிப்படையில் நிறையபேருக்கு இந்த நிறுவனம் வேலை தருகிறது. இவரது படம் ஓடும் தியேட்டர்களில், ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு வசூல் என்பதை கண்காணித்து போனில் தகவல் சொல்வது மட்டுமே அவர்களது வேலை.

வழக்குகள், பாதிக்கப்பட்டோர்

கடன் வாங்கிவிட்டு, ஃபைனான்ஸியரிடம் கடுமையான வார்த்தைகளால் மிரட்டப்பட்டு, அதில் மனமுடைந்து 2003-ல் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போதுதான் முதன்முறையாக அன்புச்செழியனின் பெயர் ஊடகங்களில் பகிரங்கமாக அடிபட்டது. ஆனாலும், அந்த தற்கொலை விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடிகை ரம்பா 2003-ம் ஆண்டு, ‘த்ரீ ரோசஸ்’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பித்தர முடியாத நடிகை ரம்பா, மதுரைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டு மிரட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அதே ஆண்டில், நடிகை தேவயானி தயாரித்து, அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கிய ‘காதலுடன்’ பட கடன் விவகாரத்திலும் அன்புச்செழியனின் பெயர் அடிபட்டது. இவர் மீது முதன்முதலில் துணிச்சலாக போலீஸில் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பாளர் எஸ்.வி.தங்கராஜ். ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான அவர், 2012-ல் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அப்போது எஸ்பியாக இருந்த அஸ்ரா கர்க் அன்புச்செழியனை கைது செய்தார்.

சொத்து விவரம்

மதுரை கீரைத்துரையில் உள்ள பழைய பங்களா, தெற்குமாசி வீதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அலுவலகம் தவிர, பல நூறு ஏக்கர் நிலத்தையும் வாங்கி இருக்கிறார் அன்புச்செழியன். ரியஸ் எஸ்டேட் தொழிலில் ஆர்வமுள்ள அவர், மதுரை ரிங் ரோட்டில் வாங்கிப் போட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனம், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனது அலுவலகம் செயல்பட்டு வந்த பிரம்மாண்டமான இடத்தை விற்றது. அந்த இடத்தை வாங்கி, பிளாட்களாகப் பிரித்து விற்பனை செய்தது அன்புச்செழியனே என்கிறார்கள். அதில் ஒரு பகுதியில் சாலையை ஒட்டி அவர் கட்டியுள்ள புத்தம் புதிய பங்களா பல கோடி ரூபாய் பெறும் என்கிறார்கள். சென்னையிலும் ராமநாதபுரத்திலும் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. 2015-ல் அவரது வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது.

இயக்குநர் பாலாவுடன் நட்பு

மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் இயக்குநர் பாலாவுக்கும், அன்புச்செழியனுக்கும் இடையே நட்பு இருந்ததாகச் சொல்கிறார்கள் சினிமாத் துறையினர். அவர்கள் மேலும் கூறும்போது, “நான் கடவுள் படத்தில் நடிப்பதாக கால்சீட் கொடுத்திருந்த அஜித், அப்படத்தைத் தொடங்க பாலா தாமதப்படுத்துகிறார் என்று விலக முயன்றபோது அன்புச்செழியன் கட்டப்பஞ்சாயத்து செய்தது அதன் அடிப்படையில்தான். அஜித்தை மதுரைக்கே கொண்டுவந்து தாக்கியதாகக்கூட தகவல் பரவியது. அதனை இதுவரையில் அஜித் மறுக்கவில்லை.

அன்புச்செழியனின் அடாவடியால் சொந்த மைத்துனரை இழந்த சசிகுமார், போலீஸில் புகார் கொடுக்கச் சென்றபோது, நட்பு காரணமாக பாலா தடுத்ததாகவும் சொல்கிறார்கள். அன்புச்செழியனின் பலம், சினிமாத்துறையில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள்தான். எனவே, விசாரணை என்று வரும்போது அவர்களையும் விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள்.

அன்பு ஆதிக்கம் ஒழியுமா?

“அன்புச்செழியன் தான் கடன் வழங்கியவர்களை மட்டும் மிரட்டவில்லை. தன்னிடம் கடன் வாங்காமல், வேறு யாரிடமாவது உதவி பெற்று படம் தயாரிப்பவர்களையும் அச்சுறுத்தியிருக்கிறார். அந்தப் படங்கள் வெளியாகிறபோது மதுரை, ராமநாதபுரம் பகுதியில் இவரைத் தாண்டி வெளியிட முடியாது. வேறு சில பகுதிகளிலும் தனது சொந்த செல்வாக்கால் படத்தைத் தடுத்து நிறுத்துவதிலும் அன்பு வல்லவர். இதனால்தான், அவரிடம் கடனே வாங்காவிட்டாலும் நன்றி அன்புச்செழியன் என்று டைட்டிலில் பெயர் போட்டு படம் வெளியிட்ட கொடுமைகள் அரங்கேறின.

அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட பலர் புகார் கொடுக்கப் பயந்துபோய் இருக்கிறார்கள். சம்பவம் எப்போது நடந்திருந்தாலும் இப்போது ஒட்டுமொத்தமாக புகார் கொடுக்க அவர்கள் முன்வர வேண்டும். அரசும் தனிப்பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சினிமாத் துறையினர்.

சினிமாத் துறையின் தவறு

“திரைத்துறையினர் மீதும் தவறு இருக்கிறது. ஏவிஎம், சத்யா மூவிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள்தான் உண்மையான சினிமா கம்பெனிகள். அவர்கள் கதை கேட்பதில் தொடங்கி, தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது வரையில் அனைத்துக்கும் தனித்தனியாக அனுபவமிக்க ஆட்களை வைத்திருப்பார்கள். தங்கள் நிறுவனத்தின் பெயர், எதிர்காலம், ஊழியர்களின் வாழ்வாதாரம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் படம் எடுப்பார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் நஷ்டமடைந்தாலும், யாரும் பாதிக்கப்படாதவாறு நிதிநிலைமையை வைத்துக்கொண்டுதான் தொழில் செய்தார்கள். ஆனால், ஒரு படத்தில் பிரபலமானவர்கள் அடுத்த வருடமே சொந்தமாக சினிமா கம்பெனி ஆரம்பித்து, நாலு நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி படம் எடுக்கிறார்கள். கையில் பத்து பைசாகூட பணமில்லாமல், கந்துவட்டி கும்பலிடம் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப்போட்டுவிட்டுப் படம் எடுப்பவர்கள், அது தோற்றுப்போனதும் தற்கொலை போன்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு அன்புச்செழியனை மட்டும் கைது செய்துவிட்டால், கடன் தொல்லையில் இருந்து சினிமாத்துறை தப்பிவிடும் என்பது மூடநம்பிக்கை. இந்த அன்பு போய்விட்டால், இன்னும் ஓராயிரம் அன்புச்செழியன்களை சினிமாக்காரர்களே உருவாக்குவார்கள். சினிமாவை சீரியஸான தொழிலாக நினைக்காமல், உல்லாசத்துக்கும், உற்சாகத்துக்குமான இடமாக நினைப்பவர்கள் இருக்கும்வரையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும். அன்புச்செழியன் சிறைக்குள் போனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அடியாளிடம் கடன் கேட்டு அடுத்த மாதமே சினிமாக்காரர்கள் போக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக கருத்து கேட்க அன்புச்செழியனை செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரது அனைத்து எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரது மதுரை அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அவரது தொழில் உதவியாளரான உறவினர் ஒருவரிடம் பேசியபோது, “அன்புச்செழியனை கந்துவட்டிக்காரர் என்று சொல்வது சுத்தப்பொய். எங்கள் நிதியுதவியால் வெற்றிபெற்று கோடீஸ்வரரானவர்கள், வாய் திறப்பதில்லை. அகலக்கால் வைத்துவிட்டு, அவர்களே பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள். முதுகு தண்டுவட பிரச்சினையால், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சசிக்குமார் தரப்பின் புகார் குறித்து விரைவில் அறிக்கையாகவோ, பேட்டியாகவோ விளக்கம் கொடுப்பார். அதுவரையில் அவரைப் பற்றிய வதந்திகள் வலம் வரும்” என்றார்.

அரசியல் செல்வாக்கு தந்த ஊக்கம்

அன்புச்செழியனின் தந்தை குடும்பத்தினர் அதிமுக அனுதாபிகள் என்றாலும், தொழிலில் வளர்ந்த பிறகு திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் பொதுவானவராகவே வலம் வந்தார். 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சி பிரமுகர்களுடனும், அதன் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் மு.க.அழகிரியுடனும் நெருக்கம் காட்டினார். தயா அழகிரி சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது, தயாரிப்புக்கும், பட வெளியீட்டுக்கும் அவர் உதவிகளை செய்துள்ளார்.

2011-ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அன்புச்செழியன் அதிமுகக்காரர் ஆனார். அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்த அவர், 2016 தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக் கழகத்தில் விருப்ப மனு கொடுத்திருந்தார். சீட் பெறுவதற்காக சசிகலா குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டார். ஆனால், அவருக்குப் பதில் அந்தத் தொகுதியில் அதிகமாக வசிக்கும் சவுராஷ்டிரா இனத்தை சேர்ந்த இளைஞருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அன்புச்செழியன் ஓயவில்லை.

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேலு இறந்ததும் வந்த இடைத்தேர்தலிலும் சீட் கேட்டு மல்லுக்கட்டினார். ஆனால், ஜெயலலிதா உடல் நலம் சீராக இருந்தபோதே ஏ.கே.போஸ்தான் வேட்பாளர் என்று சொல்லிவிட்டதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவின் தயவால், கட்சியில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஆகியோருக்கும் அன்புச்செழியன் நன்கு அறிமுகமானவர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் சிவகங்கையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் கே. பழனிசாமி மதுரை வந்திருந்தபோது, தடல் புடலாக வரவேற்பு கொடுத்தார் அன்புச்செழியன். நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள், பத்திரிகை விளம்பரம் என்றும் அசத்தினார். இந்தப் பின்னணிதான், அசோக்குமார் பிரச்சினையை போலீஸ் கவனத்துக்கு கொண்டு செல்லாததற்கு காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதிமுகவில் தீவிரமாக இறங்கும் முன்பு, தொழில் பாதுகாப்புக்காக சாதி அமைப்பு ஒன்றையும் தொடங்கினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x