Published : 14 Jul 2014 08:58 AM
Last Updated : 14 Jul 2014 08:58 AM

கட்டிடப் பணிகளுக்கு சான்றளிக்க அரசு அங்கீகாரத்துடன் வல்லுநர் குழு: கட்டுமானத் துறையினர் வலியுறுத்தல்

அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டும்போது அங்கு நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்து சான்றளிக்கும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுநர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கட்டுமானத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமல்லாது கட்டுமானத்துறையினரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும் தங்களது தொழில்ரீதியான செயல்பாடு களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள சரியான தருணம் இதுதான் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

இது தொடர்பாக கட்டுமானத் துறையின் முன்னணி நிபுணர்கள் தங்களது கருத்துக்களை “தி இந்து”விடம் பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:

என்.நந்தகுமார், தலைவர் கிரெடாய்

கட்டுமானத் தொழிலில் இருக்கும் சில குறைபாடுகளைக் களைவதற்கு ஏற்ற தருணம் இது. எங்களின் தொழில்ரீதியான அணுகுமுறைகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமும் இதுவே. இதைப் பயன்படுத்தி, கட்டுமானத் தொழிலை முற்றிலும் நம்பகத்தன்மை உள்ளதாக மாற்ற முடியும்.

புதிதாக கட்டிடம் கட்டப்படும் விதம், அதற்கு ஒப்புதல் அளித்தபடிதான் கட்டப்படுகிறதா என்பது போன்றவற்றை ஆராய உரிய வழிமுறைகள் இல்லை. விதிமீற எளிதில் தூண்டும் வகையில் தற்போதைய கட்டிட விதிமுறைகள் உள்ளன. இதைத் தடுப்பதற்காக, கட்டுமானத்தின் ஒவ்வொரு துறையிலும் அது சார்ந்த நிபுணர்களைக் கொண்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தனித்தனி (வடிவமைப்பு, மண்ணியல் ஆய்வு) தர நிர்ணய அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அந்த குழு, கட்டுமானத் துறையில் ஈடுபடுவதற்கான தகுதிகளை நிர்ணயிக்க வேண்டும். இக்குழுவில் அரசாங்கம் தலையிடக் கூடாது. ஆனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பாக அது இருக்க வேண்டும்.

இக்குழுவினரின் சான்று இல்லாமல் புதிய பன்னடுக்குக் கட்டிடங்களில் மக்களை குடியேற அனுமதிக்கக் கூடாது. எனவே, கட்டிடத்தைக் கட்டும் சுதந்திரமான தரநிர்ணய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரமோத் பாலகிருஷ்ணன், கட்டிட கலை நிபுணர்

கட்டிட உரிமையாளர்கள், வெளிநாட்டில் இருந்து கட்டிட வடிவமைப்பாளர்களை அழைத்து வருகிறார்கள். உள்ளூரில் திறமையானவர்கள் இருந்தும் பெரிய வாய்ப்புகளை அளிப்பதில்லை. கட்டிடக் கலை வல்லுநர்களுக்கு போதிய அதிகாரங்கள் அளிக்கப்படுவதில்லை. இடத்தின் உரிமையாளர்தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறார். ஆனால் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டும் அவரை முழு பொறுப்பாக்குவது தவறு. வடிவமைத்தபடி கட்டிடத்தை பெரும்பாலானோர் கட்டுவதில்லை.

ஆர்.பெருமாள்சாமி, சிங்கப்பூரின் பியூரோ இன்ஜினீயர்ஸ் நிறுவனம்

அரசு அளித்த திட்ட ஒப்புதல்படி கட்டிடங்கள் கட்டப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய தனியாக ஒரு அரசு சாராத, அதிகாரமிக்க அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சிங்கப்பூரில் கட்டிடங்கள் கட்டப்படும்போதே அதன் தரத்தினை உறுதிப்படுத்த “சைட் இன்ஜினீயர்ஸ்” நியமிக்கப்படுகின்றனர்.

வெங்கடேஷ் பிரசாத் சிந்தலூரி, ஜியோமரைன் மண்ணியல் ஆய்வு நிறுவனம்

பெரிய கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றின் அருகில் ஏற்கெனவே உள்ள கட்டிடங்களை அது பாதிக்கிறதா என்பதை கட்டிட வடிவமைப்புப் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்.ரவி, கட்டிட கட்டமைப்பு பொறியாளர்

புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆராய தற்போது வழிவகைகளே இல்லை. தொழிலாளர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x