

விருத்தாசலம்: விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களோடு வரும் மனுதாரர்களை, கோட்டாட்சியர் காக்க வைத்து அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியராக இருந்த சி.பழனி, ஆட்சியராக பதவி உயர்வு பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். இதையடுத்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு, துணை ஆட்சியர் லூர்து சாமி பொறுப்பு கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட அவரிடம் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட மக்கள், தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால் அதற்கு தீர்வு ஏற்படவில்லை. தீர்வு கிடைக்காதவர்கள் தொடர்ந்து அலுவலகத்திற்கு வருவதும், காத்திருப்பதும் முன் எப்போதையும் விட தற்போது அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கோட்டாட்சியர், தனது அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்ந்து, தனக்கான குடியிருப்பு பகுதியிலேயே இருந்து கொண்டு, முக்கிய பிரமுகர்கள் கொண்டு வரும் மனுக்களை மட்டும் தனது குடியிருப்புக்கு கொண்டு வரச் சொல்லி, அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக இந்த அலுவலகத்துக்கு சென்று வருவோர் தெரிவிக்கின்றனர்.
“மங்களூர் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் கணவர் சங்கர், நேற்று கோட்டாட்சியர் அலுவலகம் சென்றபோது, கோட்டாட்சியர் இல்லை என்பதை அறிந்து, அதே வளாகத்தில் உள்ள கோட்டாட்சியரின் குடியிருப்புக்குச் சென்று, அவரது கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றார்.
அதே நேரத்தில் கோட்டாட்சியர் அலுவலக காத்திருப்பு கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள், 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்” என்று நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தவர்கள் தெரிவித்தனர். தொளார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறுகையில், “எனது நில பாகப்பிரிவினை தொடர்பாக எழுந்த பிரச்சினைத் தொடர்பாக மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கோட்டாட்சியரை நேரில் சந்தித்து அதுகுறித்த காரணத்தைக் கேட்கலாம் என்று நானும் 10 முறைக்கு மேல் வந்து வந்து விட்டேன். இதுவரை கோட்டாட்சியரை சந்திக்க முடியவில்லை. இதேபோன்று பலர் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார். விருத்தாசலம் கோட்டத்தில் சமீபகாலமாக மண் கடத்தல் தொடர்பான புகார்கள் அதிகளவில் வரப்பெற்றுள்ளன.
கோட்டாட்சியர் பொறுப்பு வகிக்கும் லூர்துசாமி, மண் கடத்தல் தொடர்பான புகாருக்குள்ளானவர்கள் மீது விசாரணையும் நடத்துவதில்லை, நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களுடன் கைகோர்ப்பதாகவும், ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள் கொடுத்தால் அதை கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டத் தலைவர் அசோகன் கூறுகையில், “நிலப் பிரச்சினைத் தொடர்பாக வரும் மனுக்கள் மீது ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்சியர் தலையிட்டு, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக கோட்டாட்சியர் பொறுப்பு வகிக்கும் லூர்துசாமியிடம் கேட்டபோது, “எனது அலுவலக ஊழியர்கள் தங்கமானவர்கள். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர். அலுவலகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறது.
இதை கண்டு தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், தேவையற்ற விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள் கூறும் குற்றச்சாட்டில் எதுவும் உண்மையில்லை” என்றார். கோட்டாட்சியர் சொல்வதுபடியே இருந்தாலும், இந்த அலுவலகம் குறித்து அதிக குற்றச்சாட்டுகள் வருவதால், மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். மனுதாரர்களை அலைக் கழிக்காமல் உரிய தீர்வுகளை உடனுக்குடன் காண வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.