எம்ஜிஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "எம்ஜிஆர் சிலையின் மீது, பெயின்ட் ஊற்றிய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.=

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, அனைவருடைய இதயங்களிலும் நீங்கா இடம்பெற்றிருப்பவர் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர். வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், ராயபுரம் பகுதி, 51-ஆவது வட்டம், காளிங்கராயன் தெருவில் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எம்ஜிஆரின் திரு உருவச் சிலையின் மீது நேற்று (1.8.2023) நள்ளிரவு, விஷமிகள் பெயின்ட்டை ஊற்றி உள்ளனர். இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியதாகும். மேலும், இந்நிகழ்வு கோடான கோடி கழகத் தொண்டர்களின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது.

மக்கள் அனைவராலும் போற்றி வணங்கப்பட்டு வரும் எம்ஜிஆர் சிலையின் மீது பெயின்ட் ஊற்றிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின், மக்கள் நலனைக் காப்பதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாமல், தனது குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருவது நாடறிந்த உண்மை. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல் துறை, எம்ஜிஆர் சிலையின் மீது, பெயின்ட் ஊற்றிய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in