Published : 02 Aug 2023 06:36 AM
Last Updated : 02 Aug 2023 06:36 AM

அமைச்சர் பன்னீர்செல்வம் கனடா பயணம்: பயிர்கள், பூங்கா, கால்நடை வளர்ப்பு குறித்து ஆய்வு

படம்: ட்விட்டர்

சென்னை: கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள், கால்நடை வளர்ப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி கனடா சென்றார். துறை செயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலை துறை இயக்குநர் பிருந்தாதேவி, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் காலை நடைபயிற்சியின்போது, அங்குள்ள மேஜர் கில் பூங்காவை பார்வையிட்டார். பூங்கா அமைப்பு, அங்கு உள்ள மரங்கள், பூச்செடிகள், புராதன சின்னங்கள் பற்றிய விவரங்கள், பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

ஜூலை 31-ம் தேதி இந்திய தூதரகத்துக்கு சென்று, இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மாவை சந்தித்தார். அப்போது கனடாவின் விவசாய வளங்கள், பயன்படுத்தப்படும் உயரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள், அறுவடைக்கு பிறகு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி ஆகியவை குறித்து அமைச்சருக்கு தூதர் விளக்கினார்.

தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கனடாவுக்கு சென்று பல்வேறு வேளாண் உத்திகளை கண்டறியும் வகையில் மாணவர்கள் பரிமாற்றம் குறித்தும், விவசாயிகளுக்கு தரமான உரம் விநியோகிக்கும் வகையில் ஆய்வு செய்வது குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.

ஒட்டாவாவில் கார்சொனோபி கிராமத்துக்கு சென்ற அமைச்சர் பன்னீர்செல்வம், அங்கு சோயா,மொச்சை, மக்காச்சோளம், கோதுமை, ஓட்ஸ் பயிர்கள், பழவகைகள் பயிரிடுவதை பார்வையிட்டார். ஒட்டாவாவில் உள்ள வேளாண் அருங்காட்சியகம், கால்நடை வளர்ப்பு மையம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். அருங்காட்சியகம் குறித்து அதன் காப்பாளர் எடுத்துரைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x