Published : 27 Nov 2017 10:26 AM
Last Updated : 27 Nov 2017 10:26 AM

பயன்படுத்திய எண்ணெய், துரித உணவுகளால் இந்தியாவில் இரைப்பை புற்றுநோய் அதிகரிப்பு: அரசு பொது மருத்துவமனை முன்னாள் இயக்குநர் தகவல்

இந்தியாவில் இரைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக சென்னை அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குநரும் இஎஸ்ஓ இந்தியா அமைப்பின் நிர்வாகியுமான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் தெரிவித்தார்.

உலகில் பல நாடுகள் நவம்பர் மாதத்தை இரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கின்றன. அதன்படி உணவுக்குழாய், இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் இஎஸ்ஓ இந்தியா அமைப்பு சார்பில் இரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று காலை நடைபெற்றது. சிறுவர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என 1,500 பேர் மாரத்தானில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் இரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. .

இரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறியதாவது:

பூரணமாக குணப்படுத்தலாம்

இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் முற்றிய நிலையில்தான் டாக்டர்களை சந்திக்க வருகின்றனர். ஆரம்பத்தில் வந்தால் நோயை பூரணமாக குணப்படுத்த முடியும். உலகின் பல நாடுகளில் இரைப்பை புற்றுநோய் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் என்று சொல்லப் படுகிறது.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயைக் கொண்டு உணவு சமைத்து சாப்பிடுதல், துரித வகை (பாஸ்ட்புட்) உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, உணவில் உப்பு அதிகம் சேர்த் துக் கொள்வதால் இரைப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் புகை பழக்கம் இருப்பவர்களும் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இரைப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட இவற்றை தவிர்க்க வேண்டும். பசியின்மை, ரத்த சோகை, குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடுதல், மலம் கருப்பாக கழித்தல், முதுகு வலி, வாந்தி போன்றவை இரைப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் இரைப்பை புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x