

சென்னை: தமிழக அரசால் வழங்கப்படும் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தவிருதை, சுதந்திர தின விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல், முதல்வர் உத்தரவின்படி வழங்கப்பட்டு வரு கிறது.
இந்த ஆண்டுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இளம்வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப்பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு 40 முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-ல் ‘விடுதலை’ நாளிதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணையதளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணிக்கு 2023-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கி.வீரமணிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஆக. 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முதல்வருக்கு நன்றி: விருது அறிவிப்பு குறித்த தகவல்அறிந்ததும் தலைமைச் செயலகம் வந்த கி.வீரமணி, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
முற்றிலும் நான் எதிர்பார்க்காத வகையில் இன்ப அதிர்ச்சி செய்தியாக, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எனக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திராவிட இயக்கத்தையும், பெரியாரின் தொண்டரையும் பெருமைப்படுத்தியுள்ளார். பெரியாரின் துணைகொண்ட ஆட்சிஎன்பதைக் காட்டும் வாய்ப்பாகஇந்த விருது அறிவிக்கப்பட்டுள் ளது.
இதற்கு என்னை நான் முழு தகுதியாக்கிக் கொள்வேன். திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் வழங்கியுள்ள இந்த விருதுக்காக திராவிடர் கழகம் மற்றும் திராவிட உறவுகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தொகையைப் பெறும்போது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அன்று அறி விப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.