

மானாமதுரை: கடந்த 27 மாத கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை 5-ம் நாளான நேற்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வழிவிடும் முருகன் கோயிலில் இருந்து அண்ணாமலை தொடங்கி நகராட்சி அலுவலகம் முன் நிறைவு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது மது விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணல் சுரண்டப்பட்டதால் வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வெளியூர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. கடந்த27 மாத கால ஆட்சியில் உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதியில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என திமுக கூறியது. ஆனால் இதுவரை 2,000 பேருக்குக்கூட வேலை கொடுக்க முடியவில்லை. திமுக அரசு சென்னை பகுதியிலேயே தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்கிறது. மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பது கிடையாது.
மத்திய அரசு பட்டியலின மக்களின் சிறப்பு திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்கிய ரூ.3,000 கோடியை மகளிர் உரிமை திட்டத்துக்குப் பயன்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. பணம் இல்லை என்றால் எதற்காக ரூ.1,000 கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என்று சொல்லி இருப்பர் என்றார்.
தொடர்ந்து மண்பாண்ட பொருட்களைப் பார்வையிட்டு அங்குள்ள தொழிலாளர்களைச் சந்தித்துக் குறைகளை கேட்டறிந்தார். குடியிருப்புகளுடன் கூடிய மண்பாண்டக் கூடம் அமைத்து தர வேண்டுமென தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை உறுதியளித்தார்.