பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்: போலீஸ் காவல் கோரிய மனு தள்ளுபடி

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்: போலீஸ் காவல் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

பெரம்பலூர்: மணிப்பூர் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி குன்னம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ-டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையிலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தரக்குறைவாகவும் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பிரபல புத்தக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி, குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குன்னம் போலீஸார் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேபோல, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி தரப்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதி எஸ்.கவிதா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். இதில், ரங்கம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பத்ரி சேஷாத்ரியை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீஸார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in