

திருப்பூர்: தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, திருப்பூர் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல் பணிகளை கவனிக்கும் வகையில், நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு வரும் 26-ம் தேதி ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது, என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு நன்றி: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் கூறும் போது, ‘‘தீரன் சின்னமலையின் நினைவு நாளன்று திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதற்கு பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் ஆகியோருக்கும் நன்றி’’ என்றார்.