Published : 02 Aug 2023 04:03 AM
Last Updated : 02 Aug 2023 04:03 AM
உதகை: விளம்பரத்துக்காகவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருவதாக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
மனித நேய வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடி கட்டணம் அடிக்கடி உயர்த்தப் படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில், வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். தெருவோர வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி-யால் வணிகர்கள் பாதிப்படைகின்றனர்.
அமலாக்க துறையின் கீழ் ஜி.எஸ்.டி-யை கொண்டுவரக் கூடாது. நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் வகுப்புவாத மோதல்கள் ஏற்படுமோ என்ற சந்தேகம் உள்ளது. சேத்தன் சிங் என்பவர் ரயிலில் மூன்று பேரை சுட்டுக் கொன்றார். அவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள்.
சிறுபான்மையினரை சாத்தனின் பிள்ளைகள் என்று சீமான் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் பேச்சாளராக அவர் மாறியுள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் சீமான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை.
பழங்குடியினரான குடியரசு தலைவர், மணிப்பூரில் நடக்கும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை குறித்து எதுவும் பேசவில்லை. அண்ணாமலை லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார். அவரது நடைப்பயணம் நீரிழிவு, கொழுப்பை கட்டுக்குள் வைக்க மட்டுமே உதவுமே தவிர, வேறு எதற்கும் உதவாது. மத்திய பாஜக ஆட்சி பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்திவிட்டது.
2024 மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும். உதகையிலுள்ள பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்களில் இத்தகைய கூட்டங்களை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT