Published : 02 Aug 2023 06:30 AM
Last Updated : 02 Aug 2023 06:30 AM
சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என நிதித்துறை அமைச்சர், அரசுத்துறை செயலர்களிடம் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர். அவர்கள், 90 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக அவசியம் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக ஓய்வூதியர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
பின்னர், முதல்வரின் தனிச்செயலர் பி.உமாநாத்திடமும், அகவிலைப்படி தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். நிலுவைத் தொகையுடன் சேர்த்து, அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி தேவையிருப்பதால் அதற்கான நிதி ஆதார வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக முதல்வரின் தனிச்செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலைக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வை கணக்கிட்டு வழங்க வேண்டும், நிலுவைத் தொகையையும் சேர்த்தே வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையையும் பரிசீலிப்பதாக தனிச் செயலர் உமாநாத் உறுதியளித்தார். தொடர்ந்து போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை சந்தித்தும் ஓய்வூதியர்கள் பேசினர்.
இச்சந்திப்பின்போது, சங்கத்தின் துணைத் தலைவர்கள் கே.ஜி.ஆர்.மூர்த்தி, வி.பேச்சியப்பன், துணை பொதுச் செயலாளர் கே.குமாரவேல், துணைச் செயலாளர் என்.லோகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT