அதிமுக கொடி, சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்
சென்னை: அதிமுக கொடி, சின்னத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது பழனிசாமி ஆதரவாளர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் பாசறை எம்.பாலச்சந்திரன். இவர் ஆயிரம் விளக்கு (தெ) பகுதி அதிமுக செயலாளராக உள்ளார். இவர், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று (ஆக.1) அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்குதான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தி எழும்பூர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தி இருந்தனர். இதை மையப்படுத்தியே பாலச்சந்திரன் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
