

சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை சிறப்பாக செய்யும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அடுத்த ஆண்டு முதல்சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக டயாலிசிஸ் பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அதிநவீன மூளை நரம்பு மின்காந்த சிகிச்சை இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
பின்னர், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய, மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெறுவது குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 15-ம் தேதி 1,000 படுக்கை வசதிகள் மற்றும் 19 உயர் சிறப்பு துறைகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். மருத்துவமனையில், பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது 60 படுக்கை வசதிகள் கொண்ட சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில், முதல்கட்டமாக ரூ.1.25 கோடி செலவில் 20 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் ரூ.25 லட்சம் செலவில் 4000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நவீன டயாலிசிஸ் பிரிவில் நாளொன்றுக்கு 120 பேரும், மாதமொன்றுக்கு 3,000 பேரும் சிகிச்சை பெறலாம்.
மூளை நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவில், ரூ.75 லட்சம் செலவில், அதிநவீன மூளை நரம்பு மின்காந்த சிகிச்சை இயந்திரம் நிறுவப்பப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம், பாதிக்கப்பட்ட மூளை நரம்புபகுதிகளை மின்காந்த அலைகளைக் கொண்டு தூண்டுதல் மூலம் பல நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ம் ஆண்டுசெப்டம்பர் 5-ம் தேதி தமிழக அரசின்மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 13 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன. எஞ்சிய 27 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உறுப்பு தானம் பெறுவதற்கான உரிமம் இல்லாமல் இருந்தது. ஆலோசனைக்கு பின்னர், 27 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உறுப்பு தானம்பெறுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில்தான் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டுமுதல் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மிக சிறப்பாக செய்யும் மருத்துவக் கல்லூரிடீன்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலர், ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையஉறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மருத்துவமனை சிறப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.