Published : 02 Aug 2023 04:05 AM
Last Updated : 02 Aug 2023 04:05 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பயன்பாடற்ற அரசு நிலத்தை சீரமைத்து, 40 ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் நிலையில், அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி விவசாயிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான திருச்சலூர் கிராமம் அம்மா தோப்புக்காடு அருகே பயன்பாடின்றி கிடந்த சுமார் 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த 17 விவசாயக் குடும்பத்தினர் சீரமைத்து கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் சிலர் கிணறு வெட்டி போர்வெல் அமைத்து மின் இணைப்பு பெற்று, 10-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, பலா, தென்னை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி, விவசாயிகள் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு விவசாயிகள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மா காடு பகுதியில் இது வனத்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறி நுழைபவர்கள் வனச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்' என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘திருச்சலூர் கிராமத்தில் பயன்பாடின்றி புதர்மண்டி கிடந்த சுமார் 30 ஏக்கர் நிலத்தை சீரமைத்து 17 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்துக்கு, கடந்த 1986-ம் ஆண்டு முதல் தற்போது வரை நில அனுபவத்துக்கான பசலி தீர்வையும் செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில் விளை நிலங்களுக்குள் செல்ல விடாமல் வனத்துறையினர் விவசாயிகளை தடுக்கின்றனர். விளைநிலங்களை பராமரிக்க தங்களை அனுமதிக்க வேண்டும், மேலும் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘அந்த இடம் வருவாய் ஆவணங்களில் அரசு புறம்போக்கு காடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காடு என உள்ளதால் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் நிலத்துக்கு தீர்வை போட்டுள்ளனர். தற்போது தீர்வை ஏதும் போடப்படவில்லை’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT