Last Updated : 27 Nov, 2017 09:51 AM

 

Published : 27 Nov 2017 09:51 AM
Last Updated : 27 Nov 2017 09:51 AM

ஆராய்ச்சி பணியில் லாப, நஷ்டம் பார்க்க கூடாது: மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரி கருத்து

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கிளை நிறுவனங்களை இணைக்கும் முயற்சியில் மத்திய வேளாண்மைத் துறை இறங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 3 நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கிவரும் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (சிபா), கோவையில் இயங்கிவரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்பிஐ), திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்ஆர்சிபி) ஆகிய 3 நிறுவனங்களும் வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட உள்ளன. சென்னை ‘சிபா’ ஆராய்ச்சி நிறுவனம், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (சிஎம்எப்ஆர்ஐ) இணைக்கப்பட உள்ளது. கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது. இந்த முயற்சியை கைவிடக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதி ஆயோக் பரிந்துரை

இதுபோல, நாடு முழுவதும் 40 ஆராய்ச்சி நிறுவனங்களை வெவ்வேறு தலைமை நிறுவனங்களுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் ஆராய்ச்சி மையங்களின் செலவுகளைக் குறைக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, ‘சிபா’ நிறுவனத்தின் கீழ் முட்டுக்காட்டில் இயங்கிவரும் ஆராய்ச்சி மையம் புதிய ரக மீன் குஞ்சுகளை வளர்த்து சாதனை படைத்து வருகிறது. பால் கெண்டை, வெள்ளை இறால் போன்றவற்றை உற்பத்தி செய்து, மீனவர்கள், இறால் பண்ணைகளுக்கு வழங்கி வருகிறது. மீன் உணவுகளைத் தயாரித்து வர்த்தக ரீதியாக வழங்கி வருகிறது. இதன்மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதுடன் ஆராய்ச்சிப் பணிகளிலும் முன்னணி வகிக்கிறது.

மத்திய அரசின் முயற்சி நிறைவேறினால், தற்போது நடந்துவரும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்துறைகளின் ஊழியர்கள் சங்கமும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செலவைக் குறைக்கும் நோக்கத்தில் இணைப்பு முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளனர். எந்த மையத்தையும் மூடப்போவதில்லை. ஆனால், வேறு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணையும்போது தற்போது நடந்துவரும் ஆராய்ச்சிகளுக்கான முக்கியத்துவம், நிதியுதவி ஆகியவை குறையும். இதனால், சிறப்பாக செயல்பட்டு வரும் முட்டுக்காடு ஆராய்ச்சி மையம் பாதிக்கப்படும். மீனவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும். இதனால், இணைப்பு முயற்சிக்கு பெரும்பான்மை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை லாப - நஷ்ட நோக்கில் பார்க்கக் கூடாது. லாபம் பார்த்தால் எந்த துறையிலும் ஆராய்ச்சியே செய்ய முடியாது. ஐசிஏஆர் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி நடக்க உள்ளது. அதில்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x