

மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ‘ஆப்’ (செயலி) ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்காக அம்மையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான தெற்காசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: சிறந்த தொழில்நுட்பத்திற்கு டாடா நிறுவனம் மற்றும் குவால்காம் ஆகியவை இணைந்து எம்பில்லியந்த் தெற்காசிய விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2014 ஆம் ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உட்பட 9 தெற்காசிய நாடுகளில் இருந்து 300 பேர் விண்ணப்பம் செய்தனர்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மீனவர்களுக்கு வானிலை, அரசு திட்டங்கள் மற்றும் கடல் எல்லை குறித்து தெரிவிக்கும் வகையில் கைபேசி ‘ஆப்’ (செயலியை) ஒன்றை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகப்படுத்தியது. இதற்கு 2014-ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
இந்த விருதை ஆராய்ச்சி மையத்தின் தகவல் தொடர்பு தலைவர் நான்சி ஜே. அனபெல் பெற்றுக்கொண்டார். இந்த ஆப் மூலம் 40 மீனவர்கள் கடல் பாதுகாப்பு துறையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.