Published : 01 Aug 2023 04:09 PM
Last Updated : 01 Aug 2023 04:09 PM
கடலூர்: கீழணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, கொள்ளிடம் ஆற்றில் கல்லணை - கீழணை இடையில் கதவணை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த கதவணைத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது என்று கீழணை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் சில விவசாயிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கீழ்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொள்ளிடம் ஆற்றில் மைல் 50/0 இடத்தில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், வாழ்க்கை கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் தூத்தூர் கிராமத்துக்கும் இடையே உயர்மட்டத்துடன் கூடிய கதவணை அமைக்கும் பணிக்கான மதிப்பீடு சென்னை திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளரால் அரசுக்கு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் திட்டம் கைவிட முடிவெடுக்கப்பட்டது என கருத்துரு கிடைக்கப் பெற்றது. மேலும், தற்போது சிறப்பு திட்ட வட்ட திருச்சி அலுவலகத்தின் மூலமாக உயர்மட்ட பாலத்துடன் கூடிய கதவணை அமைக்கும்பணிக்கான மதிப்பீடு மீண்டும் சமர்ப்பிக்க பரிசீலனையில் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் கீழணை பாசன விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு கல்லணைக்கு வந்து சேரும் நீரில், 10 விழுக்காடு பாசன நீரை பெறும் உரிமையாளர்களாக கீழணை பாசன விவசாயிகள் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், கல்லணையில் இருந்து கீழணை வரை 81 கி.மீ தூரம் பயணிக்கும் கொள்ளிடம் ஆற்று நீர், முழுமையாக கீழணை பாசன விவசாயிகளுக்கு சொந்தமானது.
இந்த கீழணையின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட 31 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்களுக்கு கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால் மூலமாக பாசன நீர் செல்கிறது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் விளை நிலங்களுக்கு குமிக்கி மண்ணியாறு, மேலராமன், மற்றும் கீழராமன், வினாயகன் தெரு ஆகிய வாய்க்கால் மூலமாக பாசன நீர் செல்கிறது.
அதன்பின் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலங்களுக்கு கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை வாய்க்கால், வடவாறு வழியாக பாசன நீர் செல்கிறது. மேலும், வீராணம் ஏரி நீர் என கீழணையின் மூலம் ஆக மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதியை பெற்று, ஒருபோக சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றன.
மேலும் வீராணம் ஏரியின் மூலம் விநாடிக்கு 77 கன அடி குடிநீர் சென்னைக்கு நாள் தோறும் அனுப்பப்படுகிறது. இந்தச் சூழலில் அரசு மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது. இது கடலூர் மாவட்டத்தின் கடைமடை டெல்டா விவசாயிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கீழணை பாசன ஆயக்கட்டு விவசாய சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறுகையில், “கடலுக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து சேமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தஞ்சை மாவட்டம் வாழ்க்கை மற்றும் அரியலூர் தூத்தூர் இடையே கதவணை அமைக்க கோரிக்கை வைப்பது, கீழ்மடை விவசாயிகளை பற்றிய அக்கறை இல்லாததையே காட்டுகிறது.
இப்படி கோரிக்கையை விடுக்கும் விவசாயிகள் சிலர் கொள்ளிடம் பாசன உரிமைதாரர்கள் அல்ல. தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலை மாறுதல் காரணமாக மேற்கே அமைந்துள்ள கேரளத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகத்தில் ஒரு சில ஆண்டுகளில் பொழியும் அபரிதமழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பை கருதி கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க போதிய நீர் தேக்க கட்டமைப்பு இல்லாததும், கட்டமைப்பை உருவாக்க போதிய நிலவியல் சாத்தியக்கூறுகள் இல்லாததாலும் தண்ணீர் சேமிக்க முடியாமல் கடலுக்கு செல்கிறது.
அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டால் கடல் மட்டத்தில் இருந்து மேட்டூர் அணை அமைந்திருக்கும் உயரத்தை கணக்கிட்டால் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளோ, மற்றும் கதவணைகளோ அமைப்பதற்கு நிலவியல் ரீதியாக சாத்தியமில்லை.
கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு அடுத்து 16 கி.மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் கிராமத்துக்கும், கடலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்துக்கும் இடையே உயர்மட்ட பாலத்துடன் கூடிய கதவணை அமைக்க பல காலகட்டத்தில் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் 2014 -ம்ஆண்டு அறிவிக்கப்பட்ட 110 விதியின் கீழ் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன.
ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி, தற்போது கூடுதலாக ரூ.130 கோடி ஓதுக்கீடு செய்தும் நிதி பற்றாக்குறையால் பணிகள் இன்னும் முடியாத நிலை உள்ளது. இதுவரை ரூ.530 கோடி வரையில் செலவுசெய்து, 1,100 மீட்டர் அகலத்தில் 76 நீர்போக்கிகளுடன் அமைக்கப்பட்ட கதவணையின் மூலம் 4.55 லட்சம் கன அடி வெள்ள நீரை வடிய செய்யவும், 0.343 மி.கன அடி குறைந்த அளவே தண்ணீரை சேமிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் சூழலில், விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் கல்லணை - கீழணை இடையே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கதவணைகள் அமைத்தால் பருவமழை பொய்த்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அது கடலூர் மாவட்டத்தை பெரிதும் பாதிக்கும். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடைமடைக்கு தண்ணீர் வந்து சேராது. இங்குள்ள விவசாயிகளின் நிலைமையை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் கீழணை பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கல்லணையில் இருந்து கீழணை வரை கதவணை கட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, கடலூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சை மாவட்ட பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பு கல்லணைக்கும் கீழணைக்கும் இடையில் கதவணை அமைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது” என்றார்.
பாசன நீர் பங்கீட்டு விஷயத்தில், இது தொடர்பாக முடிவெடுக்கும் போது கடலூர் மாவட்டத்தின் கடைமடை விவசாயிகளையும் அழைத்து, பேசி உரிய முடிவெடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாய சங்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT