Published : 25 Nov 2017 01:22 PM
Last Updated : 25 Nov 2017 01:22 PM

ஐஐடி நுழைவுத்தேர்வுகள்: தமிழுக்கு மட்டும் தொடர் துரோகம் நியாயமா? - ராமதாஸ்

ஐஐடி நுழைவுத்தேர்வுகள் குஜராத்தி மொழியில் மட்டும் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகளை தமிழில் ஏன் நடத்தப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அடுத்த ஆண்டும் குஜராத்தி மொழியில் நடத்தப்படவுள்ளது. தமிழ் மொழியிலும் அத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதை ஏற்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசியக் கல்வி நிறுவனங்கள்(என்ஐடி), இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஐடி), இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகள் (IIT - JEE)நடத்தப்படுகின்றன. ஐஐடி தவிர்த்த மற்ற கல்வி நிறுவனங்களில் முதன்மைத் தேர்வின் அடிப்படையிலும், ஐஐடி மற்றும் அதற்கு இணையான கல்வி நிறுவனங்களில் இறுதி நிலைத் தேர்வான அட்வான்ஸ்டு தேர்வின் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் தொடக்கம் முதலே ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. 2013-ம் ஆண்டில் குஜராத்தியிலும் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்ததை ஏற்று அதற்கு அடுத்த ஆண்டு முதல் அம்மொழியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் ஒரே மாநில மொழி குஜராத்தி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐஐடி நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள் மற்றும் அனைத்து வகையானப் போட்டித்தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு பாமக வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பாமகவின் கோரிக்கையை மத்திய அரசும், தேர்வு நடத்தும் முகமைகளும் ஆய்வு செய்து சாதகமான முடிவெடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை.

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வேற்று மொழியில் தேர்வு எழுதுவது ஆகும். மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வை அவர்களின் தாய்மொழியில் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். குஜராத் அரசு கேட்டுக்கொண்டதால் அம்மாநில மொழியில் நுழைவுத்தேர்வை நடத்தும் மத்திய அரசு, தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?

தேசிய அளவில் ஆள்தேர்வுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்களை வழங்குகிறது. மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய நீட் தேர்வும் தமிழ் மொழியில் நடத்தப்படுகிறது. அதேபோல், ஐஐடி நுழைவுத்தேர்வுகளையும் தமிழில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும் தமிழுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் துரோகம் இழைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழில் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு மறுக்கிறது.

ஐஐடி நுழைவுத்தேர்வு தமிழில் நடத்தப்படாததற்கு மத்திய அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசும் துரோகம் இழைத்திருக்கிறது. ஐஐடி நுழைவுத்தேர்வுகளை குஜராத்தி மொழியில் நடத்த ஆணையிடக் கோரி 2011-ம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அம்மாநிலத்தைச் சார்ந்த மொழி அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. அவ்வழக்கு விசாரணையில் இருக்கும் போதே நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு மத்திய அரசை தொடர்பு கொண்டு குஜராத் மொழியில் ஐஐடி நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெறுகிறது.

ஆனால், ஐஐடி நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்குத் தொடர்ந்து, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆணை பெற்ற பிறகும் கூட, அதை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளாக இருந்தாலும், உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இருந்தாலும் தமிழுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பதாக இருந்தால் ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து எட்டாவது அட்டவணை மொழிகளிலும் நடத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x