

சென்னை: தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி விரைவில் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மொத்தம் ரூ.14 ஆயிரம் ரொக்கம், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியுதவி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்தது. அது தொடர்பாக செய்திகளும் வெளியாகின.
பாஜக தலைவர் அண்ணாமலை, "இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி கர்ப்பிணிகளுக்கு கிடைக்கவில்லை என்றால், நிதி எங்கே செல்கிறது" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில், "மத்திய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0' என்ற இணையதளத்துக்கு, தமிழக அரசின் `பிக்மி 2.0' இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியாததால், மகப்பேறு நிதியுதவியை விடுவிக்க முடியாமல் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் டெல்லி சென்று, மகப்பேறு நிதியுதவியை விடுவிப்பதற்கு, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும் போது, "துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலமையம் ஆகியவற்றை இணைத்து, அதன் மூலமாகப் பயனாளிகள் பட்டியல் உறுதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மகப்பேறு நிதியுதவி விடுவிக்கப்படும். மத்திய அரசு அதிகாரிகளும் இதற்கு உறுதி அளித்துள்ளனர்" என்றார்.