செப்.15-க்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்: விவசாயிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்

செப்.15-க்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்: விவசாயிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: என்எல்சியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசும், செப். 15-ம் தேதிக்குள் அறுவடைப் பணிகளை முடித்து நிலங்களை ஒப்படைக்க விவசாயிகள் தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

என்எல்சியின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் 2007-ல்கையகப்படுத்தப்பட்டன.

அண்மையில் இந்த நிலங்களில் கால்வாய் வெட்டும்போது, பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பொக்லைன் இயந்திரத்தால் சேதமாகின. இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன. கண்டனப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தனது நிலத்தைஎன்எல்சி நிர்வாகம் உபயோகப்படுத்தவில்லை என்பதால், தன்னிடமே திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்தவிவசாயி முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.பாலு வாதிடும்போது, ‘‘இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி 16 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பயிர்களை அறுவடை செய்யும் வரை பொறுக்கக் கூடாதா? விளைந்த பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்துவிட்டனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி, அந்த நிலத்தை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தாவிட்டால், மீண்டும் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும். என்எல்சி ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. மேலும், கடல் நீரும் கலந்துவிட்டது. எனவே, என்எல்சி நிர்வாகத்தின் நிலம் கையகப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, ‘‘இந்த நிலங்களுக்கு 2012-ம் ஆண்டே ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்திருந்தால், அதற்கும் தனியாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. என்எல்சியின் 2-வது சுரங்கம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தடுக்க பரவனாறு ஆற்றை ஆழப்படுத்தி, மாற்று வழித்தடத்தில் கால்வாய் அமைக்கும் பணி 12 கி.மீ. தொலைவுக்கு நடந்து வருகிறது. இதில் 10.5 கி.மீ. வரை எந்தப் பிரச்னையும் இல்லை. மீதமுள்ள 1.05 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைப்பதில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் செப். 15 வரை விவசாயிகளுக்கு அவகாசம் வழங்கலாம். அதற்குள் விவசாயிகள் அறுவடைப் பணிகளை முடித்து, நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,‘‘இழப்பீடு வழங்கிவிட்டு இத்தனை ஆண்டுகளாக சுவாதீனம் எடுக்காமல் என்ன செய்தீர்கள்? குறைந்தபட்சம் கம்பி வேலியாவது அமைத்து இருக்கலாமே? நீங்கள் எதுவுமே செய்யாத காரணத்தால்தான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். எல்லா தவறும் உங்களிடம்தான் உள்ளது’’ என்றார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘தற்போது எந்தப் பயிரும் சேதப்படுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கும் பாதிப்பில்லை’’ என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நானும் பார்த்தேன். பொக்லைன் இயந்திரம் மூலமாக பயிர்களை சேதப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், எதற்காக விவசாயிகள் போராடுகின்றனர்? உங்கள் பணியை முறையாக செய்யாததே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்’’ என்றார்.

மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘கடந்த டிசம்பரில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயப் பணிகளை முடித்து, பொங்கலுக்குப் பிறகு நிலங்களை அரசிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் விவசாயிகள் அதன்படி நடந்து கொள்ளாமல், மீண்டும் பயிர் செய்துள்ளனர்.

மேலும், நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தின்படி, நிலத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு மனுதாரர்கள் கோர முடியாது. பழைய சட்டத்தின்படியே அவர்களது நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய் தோண்டும் பணி நடைபெறாவிட்டால், மழைக்காலங்களில் என்எல்சி சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து, பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.

அரசியல் செய்கிறார்கள்...: தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் குறுக்கிட்டு, ‘‘இந்தப் பிரச்சினையை வைத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் (கே.பாலு) அரசியல் செய்து வருகிறார். அரசியலுக்காகவே போராட்டங்கள் நடைபெறுகின்றன. என்ன முயற்சி செய்தாலும், அவர் சார்ந்துள்ள கட்சி ஆட்சிக்கு வரப்போவதில்லை.

விவசாயிகளின் நலனில் தமிழக அரசுக்கு அதிக அக்கறை உள்ளது. இவர்கள் அங்கு செல்லாமல் இருந்திருந்தாலே, எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டு இருக்காது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது’’ என்றார்.

அதற்கு வழக்கறிஞர் கே.பாலு,‘‘இது அரசியலுக்காக நடத்தப்படும் போராட்டம் கிடையாது. விவசாயிகளுக்கான போராட்டம். இதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. என்எல்சி-யால் வடமாநிலத்தவர்தான் அதிகம் பலன் அடைகின்றனர். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையும் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘என்எல்சி வேலைவாய்ப்பில் நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை மட்டுமே கோர முடியும். நிரந்தர வேலை வழங்கும்படி கோர முடியாது. தமிழகத்தைச் சேர்ந்த பலர் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பணிபுரிவதுபோல, பிற மாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர்.

அரசியல் செய்வதற்குத்தான் அரசியல் கட்சியினர் உள்ளனர். அவர்கள் அதை செய்யக்கூடாது என்று கூறமுடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அரசு அதை லாவகமாகக் கையாளவேண்டும்’’ என்றார்.

மேலும், ‘‘இந்த வழக்கில் நாளை(ஆக. 2) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசும், என்எல்சி நிர்வாகமும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.அதேபோல, செப்.15-க்குள் அறுவடைப் பணிகளை முடித்து, நிலங்களை ஒப்படைக்க மனுதாரரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in