

மதுரை: மதுரை அருகே அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 4 பேர் இறந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குமரன்குடி அருகிலுள்ள செங்கன்குழிவில்லையைச் சேர்ந்த செல்வம் மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (34), ஜாம் டேவிட்சன் (30). இவர்களது உறவினர் கமலேஷ் (54). வெளிநாட்டில் வேலை செய்த ஜேம்ஸ்மார்ட்டின் அண்மையில்தான் ஊருக்கு வந்திருந்தார். தனது தம்பி ஜாம் டேவிட்சனை துறைமுக வேலைக்கான படிப்பில் சென்னையில் சேர்க்க முடிவு செய்திருந்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு மூவரும் குமரியில் இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை ஜேம்ஸ் மார்ட்டின் இயக்கினார்.
மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி- நல்லமநாயக்கன்பட்டி இடையே நேற்று அதிகாலை 1.30 மணிக்கு அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைத் தாண்டி மதுரை- விருதுநகர் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரியின் முன்பகுதியில் மோதியது.இதில் கார் நொறுங்கியதோடு கன்டெய்னர் லாரியும் கவிழ்ந்தது.
இதில் ஜேம்ஸ் மார்ட்டின், அவரது தம்பி ஜாம் டேவிட்சன், உறவினர் கமலேஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிந்தனர். கன்டெய்னர் லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், விராதனூரைச் சேர்ந்த முனியசாமி மகன் செல்வக்குமாரும் (29) உயிரிழந்தார்.
கள்ளிக்குடி போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.