குழந்தை உயிரை காப்பாற்றும் ஊசி விலை ரூ.17 கோடி - அரசு உதவிக்கரம் நீட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மனு

குழந்தை உயிரை காப்பாற்றும் ஊசி விலை ரூ.17 கோடி - அரசு உதவிக்கரம் நீட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மனு
Updated on
2 min read

திருப்பத்தூர்: குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இளம்பெண் ஒருவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (36). இவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர் தனது 6 மாத கைக்குழந்தையுடன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் நேற்று கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை வழங்கினார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: 2021-ல் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை 7 மாதங்களுக்கு பிறகு உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து, 2-வதாக எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் ஆரோக்கியமாக பிற குழந்தைகளை போலவே இருந்தது. நாட்கள் செல்ல, செல்ல குழந்தையின் உடல் நிலையில் மாற்றம் தெரியவந்தது.

3 மாதங்கள் ஆன பிறகு குழந்தையின் கால்களில் அசைவுகள் ஏதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, சில நாட்களுக்கு பிறகு கழுத்தும் நிற்கவில்லை. அடிக்கடி மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதற்கிடையே, எனது கணவர் தீபன் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இது எனக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு பல நாட்களானது. இருப்பினும், குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.

உலகின் மிக அரிய நோய்: அங்கு குழந்தையை பல கட்டங்களாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், எனது குழந்தைக்கு உலகிலேயே அரிய வகை நோயான "ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ வகை - 1 என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், உலகில் ஒரு சிலருக்கு இதுபோன்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும், உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது கடினம் எனவும் தெரிவித்தனர்.

அமெரிக்க ஊசி: இதற்கான ஊசி இந்தியாவிலேயே இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது. இந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது எனக்கு மேலும் பேரிடியை ஏற்படுத்தியது. குழந்தைக்கு ஊசி செலுத்த மருத்துவர்கள் அளித்த காலக்கெடு குறைந்து கொண்டே வருவதால் எனது குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

மும்பையைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நோய் தாக்கியுள்ளது. அதன் பிறகு, பல கோடி ரூபாய் மதிப்பில் செலுத்தப்பட்ட ஒரு ஊசியால் தற்போது அந்த குழந்தை ஆரோக்கியதுடன் உள்ளது. அதை போலவே எனது குழந்தையை காப்பாற்றி தர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனுவை பெற்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தையை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in