தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

Published on

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தரநிலை, பாதுகாப்பான சாலைகளுக்கான பயணத்தில் மனிதனை வழிநடத்துதல்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டுநர்களின் அறிவு, திறன், நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக 3 கட்ட பயிற்சி செயல்முறையை சென்னை ஐஐடியின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், ஓட்டுநர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்பதற்காக தணிக்கை, திறன் மேம்பாடு மற்றும் மதிப்பீட்டை வழங்க புதிய முறையை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முயற்சி, ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிடையே ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டு வருவதுடன் திறமையான பயிற்சியாளர்களுக்கும் பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் பேசும்போது, “சாலை பாதுகாப்பு குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறோம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 11 சதவீதமாக இருந்த சாலை விபத்துகள், தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளன. விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தால், அது நிறைய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. உயிர் சேதங்கள் தடுக்கப்படுகின்றன” என்றார்.

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் தானியங்கி வாகனங்கள் வரத் தொடங்கிவிட்டன. இவற்றை அறிந்துகொள்ள கணிசமான காலம் எடுத்துக்கொள்ளப்படும். இடைப்பட்ட காலத்தில் மக்கள் எரிவாயு இன்ஜின் வாகனங்களில் இருந்து மின்சார வாகனத்துக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தானியங்கி வாகனங்கள் எப்போது வந்தாலும், இந்த புதிய முயற்சி பயன்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in