

சென்னை: கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைகளுக்குத் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கோயம்பேட்டில் நேற்று மொத்த விலையில் கிலோரூ.150-க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் முதல் தரத் தக்காளி கிலோ ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. இச்சந்தையில் இதுவரை இவ்வளவு விலைக்குத் தக்காளி விற்றதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.210 வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தக்காளி பயன்படுத்தி உணவு சமைப்பதையும், வீடுகளுக்குத் தக்காளி வாங்கும் அளவையும் குறைத்துக் கொண்டுள்ளனர்.
தக்காளி விலை உச்சத்தில் இருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “700 லோடுகளுக்கு மேல் வந்த சந்தையில் தற்போது 250 லோடுகளுக்கும் குறைவாக வருகிறது. நாங்கள் லாபம் பார்க்காமல் கிடைத்ததை வாங்கிக்கொண்டு வியாபாரம் செய்து வருகிறோம். நேற்றைய நிலவரப்படி மொத்த விற்பனையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்திருக்கிறோம்” என்றார்.