பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார வாகன சேவையை அதிகப்படுத்த திட்டம்
சென்னை: சென்னையில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார வாகன சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம்-விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 2 லட்சம் முதல் 2.50 லட்சம் பேர் நாள்தோறும் பயணம் செய்கின்றனர்.
பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் நிலையில், அதற்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு, ரயில் நிலையத்துக்கு வெளியே போகும் பயணிகளுக்கு அங்கிருந்து தேவையான இடங்களுக்கு செல்ல போதிய வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார வாகன சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஆட்டோ,சிற்றுந்து சேவை தொடங்கப்பட்ட பிறகு, கடந்த சில வாரங்களில் மெட்ரோ ரயில் பயணிகள்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பல்வேறு ரயில் நிலையங்களில் இந்தசேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து தேவையான இடத்துக்கு செல்லவும், வீடு,அலுவலகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவும் போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது அவசியமாகும். தற்போது, குறிப்பிட்ட அளவு ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இருப்பினும், பெரிய அளவில் மின்சாரமற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்க வேண்டும். இதற்கானபணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
