Published : 01 Aug 2023 06:39 AM
Last Updated : 01 Aug 2023 06:39 AM

அமைச்சரவை கூட்ட முடிவுகளை செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கும்போது ரகசியம் காக்க முடியாது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மதுரையில் ஆக.20-ம் தேதி நடக்க உள்ள அதிமுக மாநில மாநாடு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் செயலாளர் பொன்னையன் பேசினார். உடன் நிர்வாகிகள். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கும்போது ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், மன்றத்தின் மாநிலத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், அதிமுக சார்பில் மதுரையில் ஆக.20-ம் தேதி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டைநடத்தும் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தும், மாநாட்டில் எம்ஜிஆர் மன்றம் சார்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகப் பங்கேற்பது எனவும், மாநாடு தொடர்பாக அதிக அளவில் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பங்கேற்றமுன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மடியில் கனமில்லை. அதனால் சட்டப்பேரவையிலேயே கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொழுது போகாததால் ஓ.பன்னீர்செல்வம் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். அவருடன் டிடிவி.தினகரன் இணைந்துள்ளார். சேர்ந்து தேர்தலையும் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி போன்றது. 3 அடி தூரம் கூட ஓடாது. ஊழலைச் சுட்டிக்காட்ட அதிமுக ஒருபோதும் தயங்கியது இல்லை.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்கிறார். அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்க வேண்டும். அது குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் கூட்ட முடிவுகளை வழங்கினால் சிறையில் தபாலைப் பிரித்துத்தான் கொடுப்பார்கள். அங்கு ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி மடைமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அரசு நியமித்த பொருளாதார வல்லுநர் குழு இதுவரை ஓர் அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

மகளிர் உரிமைத் தொகையை வழங்கப் போக்குவரத்து விதிமீறல் மூலம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போதும்டாஸ்மாக்கில் வசூல் வேட்டை தொடர்கிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x