மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் தகவல்

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் தகவல்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னை திருவொற்றியூர், பொன்னேரி, ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் ராயபுரம் தொகுதிகளுக்கான, நாம் தமிழர் கட்சிமாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் ராவணன், வடசென்னை மண்டலச் செயலாளர் கோகுல், மாவட்டச் செயலாளர்கள் கார்த்திகேயன், புஷ்பராஜ், கவுரிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறேன். கட்சியினரை தேர்தல் களத்தை எதிர்கொள்ள தயார் செய்வது முக்கியம். டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்குபின்னர், ஜனவரியில் வேட்பாளர்களுடன் 2-வது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த 2 திராவிடக் கட்சிகளும் தமிழக மக்களை ரூ.1,000 உதவித்தொகைக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளன. இலவச அரிசியால்தான் வாழமுடியும் என்பதுஎத்தகைய வளர்ச்சி? கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு திமுக, அதிமுக கட்சிகள் செய்த நன்மைகள் என்ன?

இதர கட்சிகளை நம்பி நான் அரசியலுக்கு வரவில்லை. இளம்தலைமுறையை நம்பி தேர்தலைசந்திக்கிறேன். வரும் மக்களவைத்தேர்தலில் 40 தொகுதியிலும் நாம்தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். இதில் படித்த, திறமை வாய்ந்த 20 பெண்களுக்கும், 20 ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

நெய்வேலி பிரச்சினை தொடர்பாக வரும் 5-ம் தேதி நாம் தமிழர் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in