Published : 01 Aug 2023 06:17 AM
Last Updated : 01 Aug 2023 06:17 AM
சென்னை: இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 7 நாள் பயணமாக வந்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
13-வது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை அதிபரின் ஆவணத்தை இந்திய பிரதமரிடம் வழங்கியுள்ளோம். இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கியதற்காக இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரை சந்தித்தபோது, இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக உதவிகள் செய்யுமாறு கேட்டிருக்கிறோம்.
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதை தடுக்க வடக்குமாகாண பகுதியில் பொருளாதார நிலையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை உறவு என்பது மற்ற நாடுகளைவிட நெருக்கமான உறவு. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது உண்மையான நண்பன் இந்தியா என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். இந்தியரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான யுபிஐ பண பரிவர்த்தனை முறையை இலங்கையில் பயன்படுத்துவது குறித்த ஒப்பந்தம் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT