கொரட்டூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட குடியிருப்பில் அமைச்சர் முத்துசாமி, வாரிய தலைவர் ஆய்வு

கொரட்டூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட குடியிருப்பில் அமைச்சர் முத்துசாமி, வாரிய தலைவர் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: கொரட்டூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட வீட்டுவசதி வாரியகுடியிருப்பை, அமைச்சர் முத்துசாமி மற்றும் வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகில் 25-வது தெருவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 3 பிளாக்குகள் 9 தளங்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால், அடுக்குமாடி குடியிருப்பு அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகள் அவசர அவசரமாக தங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்து முதியோரை அழைத்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி சாலையில் திரண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் ஆய்வு: இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்தனர். வானிலை ஆய்வு மையத்தில் கேட்டபோது நில அதிர்வு ஏற்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வீட்டுவசதி வாரிய தலைவர்பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் குடியிருப்பை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்புவாசிகளின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.

அப்போது, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சரவண வேல்ராஜ், தலைமைப் பொறியாளர் கண்ணன், மேற்பார்வைப் பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in