Published : 01 Aug 2023 06:25 AM
Last Updated : 01 Aug 2023 06:25 AM

மத்திய சென்னை பகுதியில் ரூ.761 கோடியில் 223 கிமீ நீள மழைநீர் வடிகால் பணி நிறைவு

சென்னை: மாநகராட்சி சார்பில் மத்திய சென்னை பகுதியில் 2022-ம் ஆண்டில் ரூ.761 கோடியில் 223 கிமீநீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிப் பகுதியில்2021-ம் ஆண்டு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் 2022-ம் ஆண்டு 223 கிமீ நீளத்துக்கு ரூ.761.87 கோடியில் மழைநீர்வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், இப்பகுதி மட்டுமல்லாது மாநகரம் முழுவதும் 2022 வடகிழக்கு பருவமழையின்போது 13 செமீ மழை பெய்தபோதும், 2023 தென்மேற்கு பருவமழையில் சராசரியாக 12 செமீ மழை பெய்தபோதும் சொற்ப இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீர் சுமார் 1 மணி நேரத்துக்குள் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடசென்னையில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 769 கிமீ நீளத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 220 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதுவரை 483.83 கிமீ நீளத்துக்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தென்சென்னையில் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு ஜெர்மன் நாட்டு வங்கி நிதியில் ரூ.1,714 கோடியில் 3 கூறுகளாக மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. இதில் 60.83 கிமீ நீளத்துக்கு ரூ.597.48 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 21.82 கிமீ நீளத்துக்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளால் நங்கநல்லூர், மேடவாக்கம், மடிப்பாக்கம் மற்றும்கண்ணன் காலனி, புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, கண்ணகி நகர்செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படும்.

2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது மழைநீர்தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு மழைநீர் இதுவரை 15 கிமீநீளத்துக்குப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டின் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணி மற்றும் சிறு பழுதுபார்க்கும் பணி ரூ.27.55 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணியால் மழைநீர் தங்கு தடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மேற்கூறிய பணிகளால் 2023-ம் ஆண்டின் பருவ மழையின்போது மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x