Published : 01 Aug 2023 08:30 AM
Last Updated : 01 Aug 2023 08:30 AM
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1,000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் லாரிகள் மூலமாக சுமார் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக சுமார் 430 ஒப்பந்த குடிநீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்தலாரிகள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 குடிநீர் நிரப்பும் நிலையங்களில் நீரை நிரப்பிக்கொண்டு விநியோகம் செய்து வருகின்றன.
மாநகரம் முழுவதும் குடிநீர் குழாய் அமைக்க வாய்ப்பில்லாத இடங்களில் 8,500 குடிநீர் டேங்குகளை சென்னை குடிநீர் வாரியம் நிறுவியுள்ளது. லாரிகள் மூலமாக இந்த டேங்குகளில் நீர் நிரப்பப்படுகின்றன. மேலும் குடிநீர் டேங்குகளை நிறுவ முடியாத மற்றும் குடிநீர் குழாய்களை பதிக்க முடியாத 920 சாலைகளில் வீடு வீடாக லாரியை நிறுத்தி குடிநீர்விநியோகிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. இச்சேவைகளுக்காக தினமும் சுமார் 3,100 நடைகளுக்கு மேல் குடிநீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்த லாரிகளில் டேங்கர் மூடிகள், நீர் திறக்கும் வால்வுகள் முறையாக பராமரிக்காததால், அவற்றின் வழியாக, செல்லும் வழி எங்கும் நீரை சிந்திசெல்கின்றன. வேகத் தடைகள் மற்றும் மேடு, பள்ளங்களாக உள்ள சாலைகளில் லாரி செல்லும்போது, நீர் தளும்பி அருகில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது நீராபிஷேகமும் செய்கின்றன.
லாரி டேங்கர் மூடிகள், வால்வுகளை முறையாக பராமரிக்க லாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்காமல், அதிக செலவில் மாநகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலைகளை அமைத்து வருகிறது. வியாசர்பாடி நீர்நிரப்பு நிலையம் அருகில் செல்லும் சாலையின் ஒரு பகுதியை சிமெண்ட் சாலையாகவும், நீரை இறக்கிவிட்டு காலியாக லாரி வரும் சாலையின் மற்றொரு பகுதியை தார் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் இணையும் பகுதிபழுதாகியும் கிடக்கிறது. சில இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்து நீர் தேங்கி சகதிக்காடாக காட்சியளிக்கின்றன. பழைய வண்ணாரப்பேட்டையில் நீர் நிரப்பும் நிலையத்திலிருந்து லாரிகள் வெளிவரும் சாலைஎப்போதும் ஈரப்பதத்துடன், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும்வகையிலேயே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த இந்து தமிழ்திசை நாளிதழ் வாசகர் எஸ்.ஏ.ராஜ் கூறும்போது, "எங்கள் தெருவில் 27-வது வார்டில், நீர் நிரப்பும் நிலையம் எதிரே லாரிகளில் இருந்து சிந்தும் நீரால், சாலை சேதமடைந்து எப்போதும் நீர் தேங்கி சகதிக்காடாக காட்சியளிக்கிறது" என்றார்.
அருண் ராய் அறிவுறுத்தல்.. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் உள்ள திருவள்ளூர் மாவட்டம், கடலூர் மாவட்டங்களில் கடந்த2017-ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால், அந்த ஏரிகள் வறண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. அந்த சூழலில் நீர் சேமிப்புகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பில் அப்போது சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநராக இருந்த அருண் ராய், வாரிய பகுதி பொறியாளர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கூறியிருந்ததாவது: குடிநீருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய இன்றைய சூழலில் எக்காரணம் கொண்டும் குடிநீரை சாலைகளில் வீணாக்கக் கூடாது. குடிநீர் வாரியத்தின் நீர் பகிர்ந்துஅளிக்கும் நிலையங்களில், நீரை நிரப்பவரும் வாரியத்தின் ஒப்பந்த லாரிகளில், நீர் கசிவு இருந்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேசி, சரி செய்த பின்னரே, அந்த லாரியை குடிநீர் விநியோகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இனி வரும் காலங்களில் அவ்வாறு லாரிகளில் விநியோகம் செய்வதற்காக செல்லும்போது சாலைகளில் கசிவு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் அல்லது ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்பிறகும் இந்த அறிவுறுத்தல் கடைபிடிக்கவில்லை. சென்னையில் குடிநீர் இலவசமாக கிடைத்த காலம் போய் தற்போது கடல் நீரை குடிநீராக்க 1,000 லிட்டருக்கு ரூ.40-க்கு மேல் செலவிடப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டேங்கர் லாரிகளைப் போல ஒரு சொட்டு கூட வீணாகாதவகையில் குடிநீர் லாரிகளையும் சீரமைக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. லாரி எத்தகைய கொள்ளளவு கொண்டதாக இருந்தாலும், 6 ஆயிரம் லிட்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஸ்மார்ட் கார்டை வைக்கும்போது, மிகச்சரியாக 6 ஆயிரம் லிட்டர் குடிநீர்தான் நிரம்பும். மிகை நீரோ, குறைநீரோ நிரம்பாது. மேலும் லாரிடேங்கர்களை 2 மூடிகளைக் கொண்டுமூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இப்போது சென்னைகுடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளில்இருந்து குடிநீர் சிந்துவதே இல்லை" என்றனர்.
சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளால் மாநகராட்சி சாலை பழுதாகும் நிலையில், சில ஆயிரங்கள் செலவில் லாரி பழுதை நீக்க அறிவுறுத்தாமல், பல லட்சங்கள் செலவில் தார் சாலைகளுக்கு பதிலாக, 3 மடங்கு அதிக செலவில் சிமெண்ட் சாலையை மாநகராட்சி அமைத்து வருகிறது. குடிநீர் வாரியத்தால் ஏற்படும் செலவை உணராத மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்துகேட்டபோது, "குடிநீர் லாரி பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதில் அளிக்க முடியாது. சிமெண்ட் சாலைஅமைப்பது நல்லது தான்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT