Published : 11 Nov 2017 09:01 AM
Last Updated : 11 Nov 2017 09:01 AM

வருமான வரி வளையத்தில் ‘மணல்’ ஆறுமுகசாமி: சசிகலாவுக்கு உதவியதால் சிக்கினாரா?

நீண்டகாலமாக அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருந்த மணல் ஓ.ஆறுமுகசாமி, தற்போது நடந்திருக்கும் வருமான வரி சோதனையின் மூலம் மீண்டும் சர்ச்சைக்கு வந்துள்ளார்.

ஒரு காலத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் மணல் எடுத்து வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்த, கோவையைச் சேர்ந்த ஆறுமுகசாமி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். அதன் உச்சமாக அதிமுக, திமுக என பல கட்சிப் பிரமுகர்களுக்கு பலமான நிதியுதவி, தனது சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவி செய்து ‘வள்ளல்' என்ற பெயரையும் பெற்றார்.

திமுகவில் இருந்த நெருக்கம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியுடனான தொடர்பு 1996-ம் ஆண்டில் அந்தக் கட்சியில் மேயர் சீட் கேட்கவும் வைத்ததாக செய்திகள் உள்ளன. ஆனால் பலமான சிபாரிசு இருந்தும்கூட அதை அன்றைய முதல்வர் கருணா நிதி நிராகரித்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் அரசியல் பின்புலத்தில் இவரது மணல் தொழில் உள்ளிட்ட மற்ற வியாபாரங்களும் ஓகோ என்று நடந்தது. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக பிரமுகர்களுடன் நெருக்கமாகி, தமிழகத்தில் அரசே மணல் விற்பனை செய்யும் என்ற நிலை ஏற்பட்டபோது, அந்த மணலை அள்ளிப்போடும் உரிமையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

ஒரு லாரியில் இரண்டு யூனிட் மணலே ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதற்கு ரூ.636 டிமாண்ட் டிராப்ட் எடுத்தால் போதும். ‘ஆனால் லாரியில் நான்கரை யூனிட் வரை ஏற்றச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அதிகப்படியான மணலுக்கு ரூ.1,800 வாங்குகிறார்கள். அதன் மூலம் தினசரி பல்லாயிரக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் வரும் கோடிக்கணக்கான ரூபாய் யாருக்கோ செல்கிறது. தவிர ஆறுமுகசாமியின் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றிய பின்பே மற்றவர்களுக்கு மணல் தரப்படுகிறது’ என்றெல்லாம் மணல் வியாபாரிகள் புகார் கிளப்பினர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் மணல் கொள்ளை குற்றச்சாட்டை அவர் மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. அமைதி காத்து வந்ததாகவே தெரிகிறது. அதேவேளை, கணக்கில் இல்லா மணல் அள்ளுவதன் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.200 கோடி சசிகலா குடும்பத்துக்கே போவதாக கூறப்பட்டது. அதன்பிறகே அவர் மணல் வியாபாரத்தில் விஸ்வரூபம் எடுத்ததாக அவரைப் பற்றி தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க ஆரம்பித்தார். இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் வரை இவரது விஜயலட்சுமி அறக்கட்டளை மூலம் உதவித்தொகை பெற்றனர். இது கோவையில் பெரிய திருவிழாவாகவே நடந்தது. கோவையில் உள்ள காம்ப்ளக்ஸ் கட்டிடங்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்கோஸ் பாக்டரி என அவர் வாங்கிப் போட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே 2004 கோவை மண்டலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக சசிகலாவின் உறவினரான ராவணன் இருந்தார். அவருக்கு நிகராக இந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு செய்யக்கூடிய சக்தியாக ஓ.ஆறுமுகசாமி பலரால் பேசப்பட்டார். அந்த வகையில் தன் சமூகத்தினருக்கு அதிமுகவில் சீட்டும் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்த தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைய, அடுத்த 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் ராவணன், ஆறுமுகசாமியின் கைகளே கொங்கு மண்டல அதிமுகவில் ஓங்கியிருந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக வென்று ஆட்சிக்கு வந்த அந்த காலத்தில் கோவையின் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுக வென்று வந்ததால் இவரின் செல்வாக்கு ஜெயலலிதா, சசிகலா மத்தியில் உயர்ந்தது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அது திமுக மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது என்றும் அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் அரசு மணல் அள்ளும் உரிமை கைமாறியது. அதனால் ஆந்திரா பக்கம் மணல் அள்ளச்சென்று விட்டது ஆறுமுகசாமி தரப்பு. அதே சமயம் கோடநாடு மாளிகையின் மராமத்து பணிகள், புதிய மாளிகை எழுப்பும் பணிகளை எல்லாம் முன்னின்று ஆறுமுகசாமியே கவனித்தார் என்பதும் பரவலாக வெளிவந்த செய்திகள்.

2009 மக்களவைத் தேர்தலின்போதும்கூட அதிமுக வேட்பாளர்கள் தேர்வு, நிதிச் செலவுகளில் ஆறுமுகசாமி பங்கிருப்பதாக கூறப்பட்டது. அந்த சமயம் இப்போது போலவே இவரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறை சோதனைக்குள்ளானது. அப்படியும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு அதே பங்களிப்பை தொடர்ந்தார் என்கின்றனர் அதிமுகவினர்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது சசிகலா குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றம், ராவணன் போன்றவர்கள் கைது நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்க, ஆறுமுகசாமி அந்த இடத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு பொது வெளியில் பேசப்படுபவராக இல்லை.

ஆனாலும் தொடர்ந்து இவர் கோடநாடு பங்களா கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதாக மட்டும் தகவல்கள் வந்தன. திரும்ப மணல் அள்ளும் உரிமை ஆறுமுகசாமியின் கைக்கு வரும் என்று எதிர்பார்த்தார்கள் பலரும். அதுவும் நடக்கவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய கூட்டமொன்றில், ‘இனிமேல் மணல் அள்ளும் பணியை செய்யவே மாட்டேன்’ என்றே பேசினார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, சசிகலா கைது, தினகரன் கட்சிப் பொறுப்பு என அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும்கூட இவர் சத்தமே இல்லாமல்தான் இருந்தார். இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த பின்பே மீண்டும் அவரைப் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சசிகலா தரப்புக்கு ஆதரவாக இவர் சில நடவடிக்கைகள் மேற்கொண்டதாக பேச்சு இருந்ததாலும் கோடநாடு பங்களாவை உருவாக்கியதில் இவர் பெரும் பங்கு வகித்ததாலும்தான் இவர் வீட்டில் வருமானவரி சோதனை நடந்துள்ளது என்பதுதான் இப்போது இவரை சார்ந்தவர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x