

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி சார்பில் 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.
இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், மாற்று குடியிருப்பு மற்றும் கூடுதல் இழப்பீடு வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்ததால் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்த ஒரு சில பொதுமக்கள், விவசாயிகள் மறுத்து வந்தனர்.
இதனால் அரசியல் கட்சியினர் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டுவந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணியில் ஈடுபட்டது.
விளை நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டன. இப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து 27-ம் தேதியும் பணிகள் நடந்தன. கடந்த 28-ம் தேதி பா.ம.க ஆர்ப்பாட்டம் நடத்தியதையொட்டி அன்று பணிகள் நிறுத்தப்பட்டன. 29-ம்தேதி மீண்டும் பணிகள் நடந்தன.
நேற்று முன்தினம் 4-வது நாளாக பணிகள் விடிய விடிய நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நேற்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.