

பவானி பகுதியில் மணல் கடத்த லில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறைப்பிடிக்கப் பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அதி காரிகள் மவுனம் காப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தார் பகுதியில் உள்ள ஓடை பகுதியில் ஜெசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு, டிராக்டர்கள் மூலம் கடத்தப்படுவதாக கோபி கோட்டாட்சியர் காமாட்சி கணேசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள பவானி வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு ஜீப்பில் சென்றனர்.
ஓடைக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள மயானத்துக்கு அருகே ஜெசிபி இயந்திரம் மூலம் சிலர் டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அனுமதியின்றி மண் எடுத்ததால், டிராக்டரை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, வேகமாக வந்த மற்றொரு டிராக்டர், அதிகாரிகள் வந்த ஜீப்புக்கு முன்னால் நிறுத்தப்பட்டது.
இதனால், மயானத்துக்குள் சிக்கிக் கொண்ட அதிகாரிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இது குறித்து, பவானி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணல் கடத்தும் டிராக்டர்களின் சாவிகளை டிரைவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் டிராக்டரை அப்புறப்படுத்தினர்.
பின்னர், டிராக்டர்கள், ஜெசிபி இயந்திரத்தை போலீ்ஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் பவானி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வந்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கோபி கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து அறிய பவானி வட்டாட்சியர் முத்துசாமியை போனில் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பதில் கிடைக்கவில்லை.
இது குறித்து வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்:
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அரசியல் கட்சிகளின் பின்புலத்துடன் இயங்குகின்றனர். இவர்களை வருவாய்த் துறையினரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கல் கடத்திய கும்பலைப் பிடிக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நெருக்கடியால், அடுத்த நாளே அந்த உதவியாளர் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார்.
தற்போது வட்டாட்சியர் வாகனத்தை மறித்து, சிறை வைக்குமளவுக்கு மணல் கடத்தல்காரர்கள் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. உயர் அதிகாரிகளே இதுபோன்று பணிந்து போகும் நிலையில், கீழ்நிலை அலுவலர்கள் பயத்துடன் பணி செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.