சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து -21 மீனவ கிராமங்களின் தொடர் வேலைநிறுத்தம்

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் போலீஸார், அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மீன்களை ஏலம் விட்ட மீனவர்கள். (அடுத்த படம்) சிறைபிடிக்கப்பட்ட சந்திரபாடி மீனவர்களின் பைபர் படகு.படங்கள்: வீ.தமிழன்பன்
தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் போலீஸார், அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மீன்களை ஏலம் விட்ட மீனவர்கள். (அடுத்த படம்) சிறைபிடிக்கப்பட்ட சந்திரபாடி மீனவர்களின் பைபர் படகு.படங்கள்: வீ.தமிழன்பன்
Updated on
1 min read

மயிலாடுதுறை: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 மீனவக் கிராமங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில், சுருக்குமடி வலை மீன்பிடிப்புக்கு ஆதரவாக பூம்புகார் தலைமையில் சில மீனவக் கிராமங்களும், சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிராக தரங்கம்பாடி தலைமையில் பெரும்பாலான மீனவக் கிராமங்களும் செயல்பட்டு வருகின்றன.

சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கில், சில நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தலாம் என இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் படகுகள் இல்லாததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதியளிக்கப்படவில்லை.

இதனால், பூம்புகார் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுருக்குமடியைப் பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் புதுச்சேரி பகுதிக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தரங்கம்பாடிக்கு தென் கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் பூம்புகார் விசைப் படகு மீனவர்கள் சிலர் நேற்று சுருக்குமடி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை சந்திரபாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிறிய பைபர் படகில் ஏற்றி வந்ததாகவும் தரங்கம்பாடி மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் புகாரை சந்திரபாடி மீனவர்கள் மறுத்துள்ளனர். இதற்கிடையே மீன் ஏற்றி வந்த சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகையும், அதில் வந்த 3 மீனவர்களையும் தரங்கம்பாடி மீனவர்கள் மறித்து சிறைபிடித்து, தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த கடலோர காவல் குழும போலீஸார் மற்றும் பொறையாறு போலீஸார் விரைந்து சென்று, 3 மீனவர்களையும் மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட படகில் இருந்த மீன்களை போலீஸார், மீன்வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தரங்கம்பாடி மீனவர்கள் நேற்று இரவு ஏலம் விட்டனர்.

அதேநேரத்தில், தாங்கள் வைத்திருந்த மீன்கள் சுருக்குமடி வலையில் பிடிக்கப்பட்டவை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனவும், அவற்றை எதன் அடிப்படையில் ஏலம் விட்டனர் எனவும் சந்திரபாடி மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, தரங்கம்பாடி மீனவக் கிராம பஞ்சாயத்தார் செய்தியாளர்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அனுமதியில்லாமல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் விசைப் படகுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் வரை 21 மீனவக் கிராமங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in