Published : 16 Nov 2017 10:47 AM
Last Updated : 16 Nov 2017 10:47 AM

‘டெங்கு’ பாதிப்பில் முதலிடம் நோக்கி மதுரை: மாநகராட்சி மெத்தனத்தால் அதிகரிக்கும் காய்ச்சல்

மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மெத்தனத்தால் ‘டெங்கு’ பாதிப்பு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை முதலிடத்திலும், மதுரை இரண்டாம் இடத்திலும் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது முதலிடத்தை நோக்கி மதுரை வேகமாக நகர்கிறது. அந்தளவுக்கு தினமும் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு ‘டெங்கு’ அறிகுறி கண்டறியப்படுகிறது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 354 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த வாரம் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டதால், ராஜாஜி மருத்துவமனையே ஸ்தம்பித்தது. இரவு, பகலாக மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பான சிகிச்சையால் மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஏராளமான டெங்கு நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். ஆனால், மாநகராட்சி சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் நகர் பகுதியில் ‘டெங்கு’ கட்டுக்குள் வரவில்லை கடந்த 2 மாதங்களுக்கு முன் பருவம் தவறி மழை பெய்ய ஆரம்பித்தபோது தொடங்கிய டெங்கு பாதிப்பு, தற்போது வரை தொடர்கிறது.

மாநகராட்சி சுகாதாரத்துக்கு அடிப்படையான துப்புரவு பிரிவில் 50 சதவீத பணியாளர்கள் பற்றாக்குறை, அதிகாரிகளின் கால தாமதமான சுகாதார நடவடிக்கை போன்றவற்றால் ‘டெங்கு’வை கட்டுப்படுத்த முடியவில்லை.

அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் குவிவதால், தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆவதால் மக்கள் பொருளாதார இழப்பிற்கும் ஆளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மாநகராட்சி சுகாதாரத்துறை டெங்கு களப்பணியாளர்களை தேர்வு செய்து வீடு தோறும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அவர்கள், வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு மேற்கொண்டாலும் குடியிருப்பு பகுதி சாலைகளில் மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாததால் ‘டெங்கு’ பரவுவதை தடுக்க முடியவில்லை.

அதுபோல, ஒரு பகுதியில் ‘டெங்கு’ நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதிக்கு மட்டும் சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளரும் ஆய்வு மேற்கொண்டு அபராத நடவடிக்கை எடுக்கிறார்.

பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி, குப்பை வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாநகராட்சி வரிவசூல் செய்கிறது. அப்படியிருந்தும் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் வருவதில்லை. மழைநீர் வடிகால் அமைப்புகளும் சுத்தமாக இல்லை.

சாக்கடை கால்வாய்கள், மழைநீர் கால்வாய்களில் குப்பைகள், கற்கள் நிறைந்து மழை பெய்தால் வழிந்தோட வழியில்லாமல் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதி சாலைகள் முற்றிலும் மாயமாகி மண் ரோடாகி குண்டும், குழியுமாக ஆனதால் மழைநீர், கழிவுநீர் தேங்குகிறது. வீடுகளில் கொசு உருவாக காரணமான பழைய பொருட்கள் இருந்தால் உடனே அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் மட்டுமே அணுகுகின்றனர். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சி பகுதியில் மழை பெய்யும்போது, டெங்கு பாதிப்பு ஆண்டுதோறும் தொடர்கிறது.

டெங்குவை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளை சீரமைக்க வேண்டும். கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து சுகாதாரப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், தரைப்பாலம் கட்டுவதில் காட்டும் மாநகராட்சியின் ஆர்வம் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x