Published : 15 Nov 2017 09:17 PM
Last Updated : 15 Nov 2017 09:17 PM

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சுயநலம்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சுயநலம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆளுநர் கோவையில் அரசு அதிகாரிகளை சந்தித்ததை சில அரசியல் காட்சிகள் விமர்சிக்கின்றன, ஆனால் ஓர் அக்கறையோடுதான் ஆளுநராக இருக்கும் மாநிலத்திற்கு உதவும் நோக்கோடு நடந்து கொண்டிருப்பவரைப் பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்வது சரியல்ல.

ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தை நன்கு அறிந்தவர், மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியவர், தனது வரம்பை, கடமையை நன்கு உணர்ந்தவர், அரசியல் சட்டம் தேவைப்பட்டால் அந்த மாநில மக்களின் நலனுக்காக ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் இருக்கிறது. ஆக ஓர் வளாகத்தில் மட்டும் நடவடிக்கை என்பதைத் தாண்டி வளர்ச்சிக்காக ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் அது ஆரோக்கியம் தானே? அது மட்டுமல்ல அரசின் நடவடிக்கை பற்றி தெரிந்து கொண்டால் பாராட்டவோ, வழிகாட்டவோ சுலபமாக இருக்கும் என அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி செய்யும் கட்சியின் அமைச்சர்களே ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர், மக்களும் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் இத்தகைய கூட்டங்கள் நடைபெறுவதை நிறுத்த வேண்டும் என்கிறார்.

நான் கேட்கிறேன் ஆளுநர் ஏதாவது சட்டம் போட்டாரா மாநில சுயாட்சியை மீற? ஏதாவது எதிர்மறை நடவடிக்கை நடந்ததா? ஆரோக்கியமான நிர்வாக சூழ்நிலை தானே நிகழ்கிறது. அது மட்டுமின்றி ஆளுநரின் மேற்பார்வையிலும் நேரடியாக மக்கள் பணி சிறப்பாக நடந்தால் அது தமிழக மக்களுக்குத்தானே நல்லது. இதை ஏன் தடுக்க வேண்டும்? மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது இந்த நடவடிக்கை என்கிறார்கள், இது தான் ஆரோக்கியமான கூட்டாட்சி என்கிறேன் நான்.

மத்திய மாநில அரசுகள் ஆளுநரோடு சேர்ந்து இணைந்து இணக்கமாக நடப்பதுதான் நல்லது. ஆளுநர் அஸாம் மாநில ஆளுநராக இருந்த போது, அங்கு வெள்ளம் வந்தபோது தானே முன் நின்று களத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது மட்டுமின்றி மத்திய அரசிலிருந்து உடனடி உதவிகள் பெற பெரும் உதவியாக இருந்தார் என்பது வரலாறு. இதையே தான் தமிழக அமைச்சர் வேலுமணி ஆளுநரின் இந்த நடவடிக்கையால் பலன் பெறும் என்று சரியாக கூறி இருக்கிறார்.

ஆக ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில ஆட்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'ஆட்டுக்கு தாடி அவசியம் இல்லை என்பது போல் ஆளுநர் தேவையில்லை' என்பதே திமுக வின் கொள்கை என்கிறார், அப்படி என்றல் அவர்கள் பல்லாண்டுகள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போது இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கலாமே?

அப்போது இது குறித்து அந்த முயற்சியும் மேற்கொள்ளாதது ஏன்? ஆளுநர் கூட்டம் மட்டும் கூட்டவில்லை, தெருவையும் தானே கூட்டி மக்களுக்கு தூய்மையை பேணுவதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார், ஆகவே ஆளுநரின் நடவடிக்கையை தமிழகத்திற்கு ஆதரவான, அக்கறையான நடவடிக்கையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு நல்லது நடக்கிறது என்று பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ஆனால் எல்லாம் நன்றாக வந்தால் தங்களால் எதிர் மறை அரசியல் நடத்த முடியாது, ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என சுய நல காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்பதே உண்மை'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x