துணைத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்: தேர்வுத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: துணைத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் பணிகள் தேர்வுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வில் தோல்வி பெறும் மாணவர்களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர்கல்வியை மாணவர்களால் தொடர முடியும்.

இந்நிலையில் துணைத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத வாசகர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார்.

அதில், ‘‘தமிழகத்தில் 2016-ம் ஆண்டுக்குப் பின், 10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வைத்துள்ளவர்களுக்கு ஒருங்கிணைத்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதேநேரம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுபோல் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை வழங்குவதில்லை.

தமிழக அரசு தலையிட வேண்டும்: இதனால் வேலைவாய்ப்பு, உயர்கல்வி உட்பட பல்வேறு நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு அனைவருக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முன்வர வேண்டும். அதற்கு கூடுதல் கட்டணம் கூட வசூலித்து கொள்ளலாம்’’ என்றார்.

இதுகுறித்து தேர்வுத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் இருந்துதான் மாணவர்களுக்கு அடையாள எண் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. அந்த மாணவர்களின் விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை நம்மால் ஒருங்கிணைந்து வழங்க முடியும். அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்தவர்களுக்கு அந்த வசதிகள் இல்லாததால் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க முடியாது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in