

விருத்தாசலம்: சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக ஏற்கெனவே இழப்பீடு வழங்கிய விளைநிலப் பகுதியில் பயிரிடப்பட்ட விவசாய நிலத்தில் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் என்எல்சிக்கு எதிராக விமர்சனங்களை கூறிவரும் நிலையில், என்எல்சி நிர்வாகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டம் அரசக்குழி, முதனை, இருப்புக்குறிச்சி, நறுமணம், கோட்டேரி ஆகிய கிராமங்களில் பெய்துவரும் மழைநீர் 2-ம் சுரங்கத்தை ஒட்டிய பரவனாற்றில் கலக்கும். சுரங்க முன்னேற்றத்துக்காக பரவனாற்றில் ஆற்றுப்பாதை திருப்பிவிடப்பட்டு 13 கி.மீ நீளத்துக்கு சீரமைப்பு பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டது.
வெள்ளப்பெருக்கு அபாயம்: இதில் மேல்வளையமாதேவி அருகே 1.5 கி.மீ நீளத்துக்கு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தொடர் மழை பெய்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பரவனாற்றில் அதிகளவு மழைநீர் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமப்புறங்கள் பாதிக்கக் கூடிய சூழலும், 60 மீட்டர் தொலைவில் உள்ள சுரங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதாலும் பரவனாற்றின் சீரமைப்பு முடிக்கப்படாத 1.5 கி.மீ தூர ஆற்றுப் பாதையை சீரமைக்க நிலம் தேவைப்படுகிறது.
எனவே பரவனாற்றின் நிரந்தர பாதையை முடிக்க வேண்டிய அவசர சூழல் எழுந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகளிடம் பயிர் செய்ய வேண்டாம் என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இழப்பீடு தர முன்வந்துள்ளது: இருப்பினும் அவர்கள் பயிர் செய்துள்ளதால் ஒரு பொறுப்புள்ள நிறுவனம் என்ற முறையில் இழப்பீடு தர முன்வந்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் தனிநபர் காசோலையும் வழங்கப்பட்டுள்ளது என என்எல்சி கூறியுள்ளது.