

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் நாதமுனி - கொளத்தூர் வரை 5.8 கி.மீ தொலைவுக்கு பாறைகள் நிறைந்த சவாலான இடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் தூண்கள் அமைத்து உயர்மட்ட பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட நிலையங்களும், 6 சுரங்கப்பாதை நிலையங்களும் வருகின்றன.
இதில், கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5.8 கி.மீ. தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பகுதிபாறைகளால் நிறைந்தது என அடையாளம்காணப்பட்டு உள்ளதால், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் மிகவும் சவாலான பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை பணிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சவாலான இந்த பகுதியில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள்: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த சுரங்கப்பாதை பணி முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது. இப்பகுதியில் உள்ள மண், அண்ணா சாலையில் முதல் கட்ட பணியின்போது அடையாளம் காணப்பட்டதைபோல உள்ளது. எனவே சுரங்கப்பாதை பணி மிகவும் சவாலாக இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டு, தற்போது, வரை 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 இயந்திரங்கள் தயாராக உள்ளன. 5-வது வழித்தடத்தில் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.