Published : 31 Jul 2023 06:10 AM
Last Updated : 31 Jul 2023 06:10 AM
சென்னை: மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் சாந்தோமில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே கடந்த மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் அம்மாநில பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் ஐ.ஸ்டீபன் தலைமையில், சென்னை சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ புனித தோமா தமிழ் ஆலயம் அருகில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் ஆலயத்தின் போதகர் சைலஸ் ஞானதாஸ், செயலர் ஜெபநாத் கோயில்பிள்ளை, பொருளாளர் சாமுவேல் சாமிக்கண்ணு மற்றும் ஆலயவழிபாட்டுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் ஐ.ஸ்டீபன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``மணிப்பூர் மாநில கலவரத்தில்400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பழங்குடியின பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தியும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT