வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.150: பண்ணை பசுமை கடைகளில் விற்பனை தீவிரம்

வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.150: பண்ணை பசுமை கடைகளில் விற்பனை தீவிரம்
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோரூ.150-ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.60-க்குவிற்கப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாகத் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட நிலை யில், நேற்று கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா: கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து இருக்கும். தற்போது வெவ்வேறு மாநிலங்களுக்கு தக்காளி அனுப்பப்படுவதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரியாணி விலை உயருமா? - தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஹோட்டல்களில் தக்காளி சட்னிக்குப் பதிலாக, புதினா சட்னி வழங்கப்பட்டு வருகிறது. பிரியாணி ஹோட்டல்களில் தக்காளி முக்கியப் பயன்பாடு கொண்டதாக இருப்பதால், பிரியாணி விலையை ஏற்றுவது தொடர்பாக கடைக்காரர்கள் ஆலோசித்து வருகின்றனர். வீடுகளில் தக்காளி வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். பலர்தக்காளி பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி ஜாம்பஜார், மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அரும்பாக்கம், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை போன்ற சந்தைகளில் கிலோரூ.180 முதல் ரூ.200 வரை சில்லறை விலையில் தக்காளி விற்கப்படுகிறது. வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளில், சிறிய அளவிலான தக்காளி கிலோ ரூ.120 அளவில் விற்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், பண்ணைப் பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால், அங்கு கூட்டம் அலை மோதுகிறது. விரைவிலேயே தக்காளி விற்றுத் தீர்ந்துவிடுகிறது. எனவே, கூடுதலாக விற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பங்காடியில் பொதுமக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து, தக்காளி வாங்கிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in