Published : 31 Jul 2023 06:04 AM
Last Updated : 31 Jul 2023 06:04 AM
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார்.
இங்கு கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரக் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.கடல்நீரை நிலையத்துக்குள் கொண்டு வரும் குழாய் மற்றும்நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலைநீர்த்தேக்கத்தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத்தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை தலைமைச் செயலர் ஆய்வு செய்தார்.
பின்னர், நுண் வடிகட்டிமற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம், சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக 2,250 மிமீ விட்டமுள்ள, 1,035மீட்டர் நீளமுள்ள, கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்துக்கு கடலில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய்ஆகும். நிராகரிக்கப்பட்ட உவர்நீர்வெளியேற்றும் 1,600 மிமீ விட்டமுள்ள, 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்துக்கு கடலுக்கடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில், 48.10 கி.மீநீளத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தலைமைச் செயலர் கூறும்போது, “இந்த திட்டத்தால்வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பகுதிகளைச் சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயனடைவர். எனவே, பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT