பள்ளத்தில் கான்கிரீட் கலவையை கொட்டி புதிய சாலை: மதுரை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

பள்ளத்தில் கான்கிரீட் கலவையை கொட்டி புதிய சாலை: மதுரை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாநகராட்சியில் சாலைகளில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்டப் பணியால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் கான்கிரீட் கலவையைக் கொட்டி சமப்படுத்தி, புதிதாக சாலைகளை அமைக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் புறநகரில் 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடக்கிறது. இந்த இரு பணிகளும் நிறைவடையும் சாலை களில் ரூ.480 கோடியில் சாலைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

கடந்த காலத்தில் இதுபோல், குழாய் பதிக்கும் பணிகள் நடந்த பகுதிகளில் சாலையைச் சமப்படுத்தி ஜல்லிக்கற்களையும், தார் கலவையையும் பரப்பி சாலையை அமைப்பர். அதனால் பள்ளம் தோண்டிய சாலைகள் சில மாதங்களில் இறங்கி விடும். மழைக் காலத்தில் மேடு பள்ளமாகி விடும். இதுபோன்று குழி தோண்டி முறையாகச் சாலையை அமைக்காததே முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், புதிய முயற்சியாக பள்ளம் தோண்டிய சாலைகளில், தார்க்கலவை இறங்காமல் இருக்க 60 செ.மீ. முதல் 80 செ.மீ. அகலம் வரை குழிகளைத் தோண்டி அதில் கான்கிரீட் கலவை கொட்டப்படுகிறது. இதை சில நாட்கள் காய விட்டு ஜல்லிக் கற்களைப் பரப்பி, தார் கலவையைக் கொட்டி சாலையை அமைக்கின்றனர்.

அதனால், இந்தச் சாலைகளில் எதிர்காலத்தில் பள்ளம் ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மாநகராட்சியில் முதல் முறையாக இதுபோன்று சாலை அமைக்கும் முயற்சியை பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, புதிய சாலை அமைக்க மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே அமைத்த சாலைகள் தொடக்கத்தில் சில இடங்களில் கீழே இறங்கியதால், தற்போது இதுபோல் ஒப்பந்ததாரர்களைக் கொண்டு பள்ளங்களில் கான்கிரீட் கலவையைக் கொட்டி புதிய சாலை அமைக்கப்படுகிறது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in