Last Updated : 28 Nov, 2017 08:58 AM

 

Published : 28 Nov 2017 08:58 AM
Last Updated : 28 Nov 2017 08:58 AM

கோவையில் அலங்கார வளைவில் மோதி அமெரிக்க வாழ் பொறியாளர் பலியான சம்பவம்: உயிர்ப் பலிக்குப் பின்னரும் உணரப்படாத விபரீதம்- பேனர், கட்-அவுட் கலாச்சாரத்துக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது எப்போது?

கோவை அவிநாசி சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா அலங்கார வளைவில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அமெரிக்க வாழ் பொறியாளரான ரகு என்பவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட் அவுட், பேனர்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் இயக்கங்களும் வலியுறுத்துகின்றன.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிச.3-ம் தேதி கோவை வ.உ.சி.பூங்காவில் நடைபெற உள்ளது.இதற்காக திரும்பும் திசையெங்கும் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் விதிகளுக்கு முரணாக வைக்கப்படும் கட் அவுட், பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலும் பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகள் இதை வலியுறுத்தி மனு அளித்துள்ளன.

டிராபிக் ராமசாமி

இதுகுறித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறும்போது, ‘அரசு விழாவுக்கு தேவையற்ற விளம்பரங்களை சட்டவிரோதமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டால் விபத்து நடந்த இடம் மாநகரில் இல்லை என்கிறார். விதிமுறைகளை மீறி கட்அவுட், பேனர்களை வைக்கக்கூடாது என 2016 மார்ச்சில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011-ல் கட்அவுட், பேனர்கள் வைக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. அனுமதி கொடுப்பது, எங்கு வைப்பது என பல விதிகள் அதில் வகுக்கப்பட்டுள்ளன. கோவை விபத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறேன். அரசுக்கு வருவாய் இழப்பு, விதிமீறல், ஆக்கிரமிப்பு, விபத்து என பல பிரச்சினைகள் இதில் உள்ளன’ என்றார்.

கோவையைச் சேர்ந்த சமூகஆர்வலர் கதிர்மதியோன்கூறும்போது, ‘‘இந்த ஒரு விபத்துக்கான தீர்ப்பை மட்டும் எதிர்பார்க்காமல், நீண்ட கால நோக்கில் நிர்ந்தத் தீர்வுக்கு குரல் கொடுக்க வேண்டும். கட்சிகள் மட்டுமல்லாமல் அனைவருமே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

மாவட்ட சாலைப் பாதுகாப்பு கமிட்டி தலைவரான மாவட்ட ஆட்சியரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கோவை விபத்து சம்பவத்தில் அனுமதி அளித்திருந்தால் அதை யார் ஆய்வு செய்து அனுமதித்தார்கள்? அப்படியிருந்தால் அலங்கார வளைவு ஏன் உடனே அகற்றப்பட்டது என பல கேள்விகள் உள்ளன. அரசாணையாக வெளியிட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்’ என்றார்.

சமூக ஆர்வலர்கள் எழுப்பும் இந்த கேள்விதான், கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், சம்பவம் நடந்த சாலையிலும் ‘ரகுவை கொன்றது யார்?’ என்று எதிரொலித்தது. அவ்வாறு சாலையில் எழுதப்பட்ட மேற்கண்ட வாசகம் அழிக்கப்பட்டுவிட்டது. எனினும் அந்த கேள்விக்கு அரசிடம் இருந்து மட்டுமே உரிய பதில் கிடைக்க முடியும்.

விபத்தில் இறந்த ரகு (எ) ரகுபதியின் பெற்றோர் கந்தசாமி - சிவகாமி. ரகு, கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். தனது திருமண விவகாரத்துக்காக விடுமுறையில் கடந்த வாரம் கோவை வந்தார்.

உறவினர்களிடம் கேட்டபோது, ‘ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்ல இருந்தார். ஆன்மீக நாட்டம் அதிகம் என்பதால் பழனி செல்வதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் சென்றார். விபத்து நடந்து 1 மணி நேரத்துக்கு பிறகே தகவல் கிடைத்தது. லாரி மோதியதாக போலீஸார் கூறுகின்றனர். அதன் காரணத்தை அறிய எங்களுக்கு மன வலிமை இல்லை. ரகுவின் தாயார் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. இனி ஒருவருக்கும் இதுபோல நடந்து விடக்கூடாது’ என்றனர்.

வீடியோவை வெளியிடுவோம்

போலீஸார் கூறியிருப்பதாவது: விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீஸார் திறமையாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர். யூகத்தின் அடிப்படையில் தவறான கருத்துகள் பரவி வருகின்றன. அது எதிர்காலத்தில் சாலைப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். சம்பந்தப்பட்ட இடத்தில் பதிவான சிசிடிவு பதிவுகள் எங்களிடம் உள்ளன. சட்ட ஆலோசனை பெற்று விரைவில் வெளியிடுவோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x