Published : 19 Jul 2014 02:38 PM
Last Updated : 19 Jul 2014 02:38 PM

கட்சி நடவடிக்கை ரத்து: கழக உறுப்பினராக தொடர பழனிமாணிக்கம், இன்பசேகரனுக்கு அனுமதி

பழனிமாணிக்கம், இன்பசேகரன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இருவரின் விளக்கத்தை அடுத்து அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சி பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தலைமைக் கழகத்தின் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படாமல், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்து விட்டதாக புகார் கூறப்பட்ட கழக முன்னணியினரைப் பற்றியும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரித்த அளவில், அந்தக் குற்றச்சாட்டுகளில் முழு உண்மையில்லை என்றும், புகார்கள் உள்ளூர் கோபதாபங்களையொட்டி கொடுக்கப்பட்டவை என்றும், தாங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கழகத்திற்காக பல இன்னல்களையேற்று பணியாற்றி வருபவர்கள் என்றும், அதையும் மீறி தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தியிருந்தால், தலைமைக் கழகம் தங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கழகத் தலைவர், கலைஞர் அவர்கள் தங்களின் கடந்த கால பணிகளை எண்ணிப் பார்த்து மீண்டும் கழகத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்றும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் விளக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்களின் விளக்கங்களையெல்லாம் பார்த்த பிறகு, அவர்கள் தெரிவித்துள்ள பல கருத்துகள் அடியோடு புறக்கணிக்கப்பட முடியாத ஒரு நிலையில் அந்தக் கழகத் தோழர்கள் இருப்பது தெளிவாகிறது.

எனவே கழகத் தலைமை ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு விளக்கம் அளித்திருப்பதை கருதிப் பார்த்து, கழகத் தலைமையை எதிர்த்து குற்றம் சாட்டியவர்கள் நீங்கலாக மற்றவர்கள் எல்லாம் தொடர்ந்து கழகப் பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்கள் மீது எடுக்கப்பட விருப்பதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கை தலைமைக் கழகத்தால் கை விடப்படுகிறது.

அவர்கள் மறுபடியும் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு ஆளாகாமல் கழகப் பணிகளை முறையாகச் செயல்படுத்த வேண்டுமென்று தலைமைக் கழகம் அறிவுறுத்துகிறது. தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளர், பழனிமாணிக்கமும், தர்மபுரி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் இன்பசேகரனும் கழக நிர்வாகப் பொறுப்பில் இல்லாமல், கழகத்தில் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

விளக்கம் கோரியபோது கழகத் தலைமைக்கு எதிராக அறிக்கை விடுத்த தர்மபுரி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் முல்லைவேந்தன் கழக உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்". என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x