

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான ஐ.நா. விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையில் ராஜபக்சே அரசு நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணைக்கு ஆதரவளிக்க முடியாது என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பெரும் வேதனையையும், மனக் காயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். அதைத் தொடர்ந்து, எதிர்பார்த்தபடியே தமிழகத்திலுள்ள வேறு சில கட்சிகளின் தலைவர்களும் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு சரியல்ல என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
இலங்கை இரக்கம் காட்டுவதற்கு தகுதியான நாடல்ல என்பது தான் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து ஆகும். இலங்கை அரசின் செயல்பாடுகள் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.
ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசு, அதற்காக எந்த வருத்தமும் படாமல் தமிழர்களைக் கொடுமைப் படுத்தி வருகிறது.
போரில் பிழைத்து முள்கம்பி வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த 3 லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள், அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் இன்று வரை சொந்த வீடுகளில் குடியேற முடியவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீரர் வீதம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள அரசு ராணுவத்தைக் குவித்திருக்கிறது.
தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து கொடுமைப்படுத்துதல், கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்குதல் என உலக சமுதாயத்தால் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டிய அனைத்து குற்றங்களையும் இலங்கை செய்து வருகிறது.
சிங்கள அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொள்ள 5 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் திருந்தாத நிலையில் தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் நலன் சார்ந்த எந்தக் கடமையும் இல்லாத அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இதற்கு ஆதரவளிக்கும் நிலையில், ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளைக் கொண்ட இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
ஈழத் தமிழர் நலன் காப்பதாக கூறிவந்த பாரதிய ஜனதா கட்சி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஈழத்தமிழர் நலன் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதே இல்லை. மனித உரிமையை மதிக்காத இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கும் நிலையில், பிராண்டிக்ஸ் என்ற இலங்கை நிறுவனம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1500 கோடியில் ஆயத்த ஆடை நிறுவனத்தை தொடங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், அதில் ரூ.4500 கோடி கூடுதல் முதலீடு செய்ய இப்போதைய ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையுடன் ராணுவ உறவு கூடாது என்ற தமிழகத்தின் கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டு, இந்திய வான்படைத் தளபதி அருப் ராகா இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். ராணுவ உத்திகள் குறித்து இலங்கைப் படையினருக்கு ஆலோசனை வழங்கவிருக்கும் அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்து பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வளவுக்கு பிறகும் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகிறது.
ஈழத் தமிழர் நலனுக்காக சட்டப்பேரவையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றி விட்டதாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் முதல்வர் இப்போது சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதிலும் அமைதி காப்பதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியவில்லை.
உலகின் மிகக்கொடிய இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டுமானால், அதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு உரக்க குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும், தேவைப்பட்டால் அந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தமிழக அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தீர்மானத்தின் அம்சங்களை உரிய முறையில் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று செயல்படுத்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.