Published : 06 Nov 2017 10:06 AM
Last Updated : 06 Nov 2017 10:06 AM

வெள்ளத்தில் மிதக்கும் முடிச்சூர், வரதராஜபுரம் ரூ.19 கோடி ஒதுக்கியும் தூர்வாராத கால்வாய்: முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

ஆதனூர் - அடையாறு கால்வாயை தூர்வார ரூ.19 கோடி ஒதுக்கியும், முழு அளவில் பணிகளை மேற்கொள்ளாததால் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன என காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது:

ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் இருக்கிறது. மழைக் காலத்துக்கு முன்பாக ஏரிகள், குளங்கள், கால்வாய்களை தூர்வார வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. திமுக எம்எல்ஏக்கள், தங்கள் தொகுதிகளில் மக்களுடன் இணைந்து தூர்வாரினர். ஆனால், இந்த அரசு தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதில் மெத்தனம் காட்டியது.

கடந்த 2015-ல் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி முடிச்சூர், வரதராஜபுரம். இந்த வெள்ளத்துக்கு காரணமான ஆதனூர் - அடையாறு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் ஆதனூர் - அடையாறு கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

கால்வாயை தூர்வாரி கூடுதல் வெள்ள நீர் போக்கிகள் அமைத்தல், இரு மருங்கிலும் வெள்ள நீர் வடிய ஏதுவாக 23 இடங்களில் வெள்ள நீர் வங்கிகள் அமைத்தல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், அடையாற்றில் இணையும் திருநீர்மலையில் கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தல், அடையாறு ஆற்றின் பாலங்களில் வெள்ளத் தடுப்பு கரைகள் அமைக்க கான்கிரீட் கற்கள் பதித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், இந்தப் பணிகள் மெத்தனமாகவே நடந்தன. 45 சதவீத பணிகளே முடிந்துள்ளன. கால்வாய் செல்லும் மற்ற இடங்களில் பெயரளவுக்கு மட்டும் தூர்வாரும் பணிகள் நடந்தன. அதிலும் ஆழமாக தூர் வாராமல் விட்டுவிட்டனர்.

தூர்வாரும் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் இப்பணிகளில் அரசு வேகம் காட்டாமல் செயல்பட்டதால் இப்போது முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. எனவே, இனியாவது கால்வாய் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால்தான் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x